கோவிலுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் எவ்வாறு கட்டடம் கட்டப்பட்டுள்ளது? - மதுரை ஐகோர்ட்டு கேள்வி
|கோவிலுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் எவ்வாறு கட்டடம் கட்டப்பட்டுள்ளது என்று மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரை,
நாகர்கோவில் பகுதியை சேர்ந்த இந்துஜா மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், நாகர்கோவில் கரியமாணிக்கபுரம் கிராமத்தில் அருள்மிகு முப்பிடஆதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்து அறநிலையத்துறைக்கு கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு சொந்தமாக பல்வேறு சொத்துக்கள் உள்ளது.
இந்த கோயிலுக்கு சொந்தமான 50 சென்ட் இடத்தில் தென்னம் தோப்பு உள்ளது. இந்த இடத்தில் தனி நபர்கள் குடிசைகள் அமைத்து தங்கி வந்தனர். தற்போது இந்த இடத்தில் கான்கிரீட் கட்டிடம் அமைத்துள்ளனர். கோவில் இடமான இந்த இடம் விவசாயத்திற்கான வகை படுத்தப்பட்டுள்ளது. இதில் தனிநபர்கள் கான்கிரீட் கட்டிடம் அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இந்து அறநிலையத் துறையினர் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
எனவே, நாகர்கோவில் கரியமாணிக்கபுரம் கிராமத்திலுள்ள அருள்மிகு முப்பிடஆதி அம்மன் கோயிலுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கான்கிரீட் கட்டிட ஆக்கிரமிப்பை அகற்றி பழைய நிலைக்கு கொண்டு வர உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு இன்று வந்தது. அப்போது , கோவிலுக்கு சொந்தமான விவசாய இடத்தில் எவ்வாறு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த மனு குறித்து திருநெல்வேலி இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை 3 வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.