சென்னை
சென்னை நகருக்குள் எவ்வளவு வேகத்தில் வாகனங்களை ஓட்டலாம்? 10 நாளில் அறிவிப்பு வெளியாகிறது
|சென்னை நகருக்குள் எவ்வளவு வேகத்தில் வாகனங்களை ஓட்டலாம் என்பது பற்றிய அறிவிப்பு 10 நாட்களில் வெளியாகும் என்று போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
சாலை விபத்தில் சேதம் அடைந்த வாகனங்களில் சிக்குபவர்களை உடனடியாக மீட்பதற்காக சென்னை போக்குவரத்து போலீசார் சார்பில் நவீன உபகரணங்கள் மற்றும் முதலுதவி சிகிச்சை பெட்டகங்கள் அடங்கிய 'வீரா' என்ற வாகனம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வாகனத்தின் செயல்பாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த வாரம் தொடங்கிவைத்தார்.
இந்த நிலையில் இந்த வாகனத்தின் ஒத்திகை நிகழ்ச்சி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. விபத்தில் சிக்கிய 2 பேரை காரை உடைத்து 'வீரா' மீட்பு வீரர்கள் மீட்பது போன்றும், பின்னர் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதும் என இந்த ஒத்திகை நிகழ்ச்சி தத்துரூபமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் கமிஷனர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா, கபில்குமார் ஷரத்கர், ஆர்.சுதாகர், அஸ்ரா கார்க் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பின்னர் போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
'வீரா' வாகனத்தில் உள்ள நவீன எந்திரங்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் பயன்படுத்தி வருகின்றனர். எனவே இந்த எந்திரங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது பற்றி அவர்களிடம் நம்முடைய போலீசார் (வீரா வாகனம்) பயிற்சி பெற்று வந்துள்ளனர். விபத்தில் சிக்குவோர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது பற்றி செயின்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் நிறுவனம் பயிற்சி அளித்துள்ளது. விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகளின் உயிரை முதலில் காப்பாற்றுவதுதான் முக்கியம். இதுதான் எங்களுடைய நோக்கம்.
சென்னை ஐ.ஐ.டி.யில் நாளை (இன்று) கருத்தரங்கம் நடக்கிறது. இதில் ஐ.ஐ.டி., நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி டாக்டர்கள் கலந்துகொள்கின்றனர். இதில் மேலும் என்ன மாதிரியான கூடுதலாக பயிற்சி அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும். தற்போது 'வீரா' வாகன பணியில் 12 போலீசார் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 3 'ஷிப்டு'களில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 'ஷிப்டு'களிலும் 4 பேர் பணியில் இருப்பார்கள்.
சென்னை நகருக்குள் வாகனங்களை எவ்வளவு வேகத்தில் இயக்க வேண்டும் என்பது பற்றி கூடுதல் கமிஷனர் (கபில்குமார் ஷரத்கர்) தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரை கிடைத்துள்ளது. இதனை நடைமுறைக்கு கொண்டு வருவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இன்னும் 10 நாட்களில் இந்த அறிவிப்பு வெளியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
போக்குவரத்து கூடுதல் கமிஷனர் ஆர்.சுதாகர் கூறியதாவது:-
வீரா வாகனம் விபத்துக்குள்ளான வாகனங்களில் இருந்து மக்களை உடனடியாக மீட்பதற்காகவும், குறுகிய இடத்தில் சிக்கி கொள்ளும் இலகுரக வாகனங்களை அப்புறப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும். சென்னை, தாம்பரம், ஆவடி ஆகிய 3 கமிஷனரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இந்த வாகனம் அனுப்பப்படும். வருங்காலங்களில் எல்லா தேசிய நெடுஞ்சாலைகளுக்கும் இந்த வாகனத்தை அனுப்புவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட விபத்துகள் நேரிடும் பட்சத்தில் எது பெரிய விபத்தோ, அங்கு இந்த வாகனம் அனுப்பப்படும்.
கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் 361 பேர் உயிரிழந்தனர். இந்த ஆண்டு இதுவரையில் 341 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை நகரில் மெட்ரோ ரெயில் பணி காரணமாக சில சிக்னல்களை நிறுத்தி வைத்திருந்தோம். அந்த சிக்னல்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆட்டோக்களால் ஏற்படும் பிரச்சினைகள், அதனை சரி செய்வதற்கான வழிமுறைகள் என்ன என்பதை பற்றி ஆராய்வதற்கு இணை கமிஷனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் ஆட்டோ டிரைவர்களும் இருக்கிறார்கள். இன்னும் 2 நாட்களில் அந்த குழுவின் அறிக்கை கிடைக்கும். அதனடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.