கோயம்பேடா.. கிளாம்பாக்கமா..? நீடிக்கும் குழப்பம்: அதிகாரிகளுடன் ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் வாக்குவாதம்
|கிழக்கு கடற்கரை சாலை மார்க்கம் நீங்கலாக மற்ற அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே புறப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
சென்னை:
சென்னை அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் திறக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் மற்ற ஊர்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே இயக்கப்பட வேண்டும் என போக்குவரத்து துறை சில தினங்களுக்கு முன்னர் சுற்றறிக்கை அனுப்பியது. ஆனால் கிளாம்பாக்கத்தில் போதிய இட வசதிகள் இல்லாததால் கோயம்பேட்டிலிருந்தே ஆம்னி பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த சூழ்நிலையில், போக்குவரத்து துறை சார்பில் இன்று வெளியான அறிவிப்பில் கிழக்கு கடற்கரை சாலை மார்க்கம் நீங்கலாக மற்ற அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே புறப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. உத்தரவை மீறும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும் என அமைச்சர் சேகர்பாபுவும் தெரிவித்தார்.
ஆனால், பேருந்துகளை இயக்கும் அளவுக்கு கிளாம்பாக்கத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என்பதால், இன்று கோயம்பேட்டில் இருந்துதான் பேருந்துகள் இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
கோயம்பேட்டில் இருந்து இன்று ஆம்னி பேருந்துகளை இயக்கக்கூடாது என போக்குவரத்து துறை அதிகாரிகள் நேரடியாக சென்று வலியுறுத்தினர். அப்போது, அவர்களுக்கும் பேருந்து ஓட்டுநர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென காலி செய்ய முடியாது என பேருந்து உரிமையாளர்கள் கூறினர். இதனால் கோயம்பேடா? கிளாம்பாக்கமா? என்ற குழப்பம் நீடிக்கிறது.
இதுபற்றி ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் கூறுகையில், "தைப்பூசம் உள்ளிட்ட விடுமுறை தினங்களுக்கான முன்பதிவு ஏற்கனவே முடிந்துவிட்டது. நேற்று இரவு திடீரென அறிவிப்பு வெளியிட்டு, 30-ம் தேதிக்குள் கோயம்பேட்டை காலி செய்யும்படி கூறினார்கள். தற்போது திடீரென கோயம்பேட்டில் இருந்து இயக்கக்கூடாது என்று சொன்னால் என்ன செய்வது? 2 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ள நிலையில் எப்படி திடீரென இடத்தை மாற்ற முடியும்? இது மக்களுக்கான அரசு. எனவே, இந்த விஷயத்தில் முதல்-அமைச்சர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் இந்த விவகாரத்தில் வழக்கு தொடர்வதைத் தவிர வேறு வழியில்லை" என்றார்.