< Back
மாநில செய்திகள்
அங்கீகரிக்கப்படாத மனைகள் எவ்வாறு பத்திரப்பதிவு செய்யப்படுகிறது? - மதுரை ஐகோர்ட்டு கேள்வி
மாநில செய்திகள்

அங்கீகரிக்கப்படாத மனைகள் எவ்வாறு பத்திரப்பதிவு செய்யப்படுகிறது? - மதுரை ஐகோர்ட்டு கேள்வி

தினத்தந்தி
|
20 Sept 2022 7:59 PM IST

பத்திரப்பதிவு துறையில் எவ்வாறு அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப்பதிவு செய்யப்படுகிறது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மதுரை,

தேனி மாவட்டம் வீரபாண்டியை சேர்ந்த சரவணன் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது:-

தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசின் முறையான அங்கீகாரம் பெறாமல் சட்டவிரோதமாக நிலங்களை பத்திர பதிவு செய்து வருகின்றனர். உரிய அங்கீகாரம் பெறாத மனை பிரிவுகளை மோசடியாக மக்களிடம் விற்பனை செய்வது மட்டுமல்லாமல், அரசுக்கு மிகப்பெரிய இழப்பீட்டையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

உள்ளாட்சி துறைகளில் அங்கீகரிக்கப்படாத நிலம், மனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என சட்டம் உள்ளது. ஆனால், சட்ட விதிகளை முறையாக பின்பற்றாமல் தேனி சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளர் உஷாராணி முறைகேடாக பத்திரப்பதிவு செய்துள்ளார்.

இவ்வாறு முறைகேடாக பத்திரப்பதிவு செய்த பத்திரங்களை ரத்து செய்ய வேண்டும், முறைகேட்டில் ஈடுபட்ட பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பத்திரப்பதிவு தொடர்பாக சரமாரியாக கேள்விகள் எழுப்பினர். இந்த வழக்கில் அங்கீகரிப்படாத மனைகளை பத்திரப்பதிவு செய்த அதிகாரி யார் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சம்பந்தப்பட்ட அதிகாரி உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

தேனி பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு நிலுவையில் உள்ளது. அவரை இதுவரை பணியிடை நீக்கம் செய்யாதது ஏன்? லஞ்ச ஒழிப்பு துறையின் தேனி பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில் வேலை பார்க்கும் சார் பதிவாளர் மீது புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து தேனி பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில் பணியாற்றும் சார் பதிவாளர் மீது பத்திரப்பதிவு துறை ஐ.ஜி. உடனடியாக பணியிடை நீக்கம் செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். பத்திரப்பதிவு துறையில் எவ்வாறு அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப்பதிவு செய்யப்படுகிறது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அங்கீகரிப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என உத்தரவு பிறப்பித்தனர்.

இதே போன்ற நிலை தொடர்ந்தால் ஒவ்வொரு துறை செயலாளரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரித்த நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை வருகிற 22-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்