< Back
மாநில செய்திகள்
குடும்ப தலைவிகள் உதவி மையங்களில் குவிந்தனர்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

குடும்ப தலைவிகள் உதவி மையங்களில் குவிந்தனர்

தினத்தந்தி
|
20 Sept 2023 11:22 PM IST

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்ட குடும்ப தலைவிகள் உதவி மையங்களில் குவிந்தனர்.

தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் கலைஞர் மகளிா் உரிமை திட்டத்தில் ஏற்கனவே பெரம்பலூர் மாவட்டத்தில்விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமில் மொத்தம் 1 லட்சத்து 63 ஆயிரத்து 150 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதில் 62 ஆயிரத்து 476 விண்ணப்பங்கள் கள ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திற்கு முதற்கட்டமாக வங்கிகள் மூலம் 7 ஆயிரத்து 823 பேருக்கு பணம் எடுக்கும் ஏ.டி.எம். கார்டுகள் வரப்பெற்றுள்ளது. அதில் 2 ஆயிரம் பேருக்கு ஏ.டி.எம். கார்டுகள் கடந்த 15-ந்தேதி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கூடுதல் விவரங்கள் தேவைப்படுவோருக்கும். விண்ணப்பங்கள் நிராகரிப்பு தகவல்கள் வழங்குவதற்கும் மற்றும் வங்கிகள் தொடர்பான குறைகளை களைவதற்கும் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, குன்னம் ஆகிய தாசில்தார் அலுவலகங்களில் கலைஞர் மகளிா் உரிமை திட்டங்களுக்கு உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிராகரிக்கப்பட்ட குடும்ப தலைவிகள் இ-சேவை மையங்கள் மேல்முறையீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காண அனைத்து அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட குடும்ப தலைவிகள் நிராகரிப்பு பட்டதற்கான தகவல்களை தெரிந்து கொள்வதற்கு கலைஞர் மகளிர் உரிமை திட்ட உதவி மையங்களில் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து உதவி மையத்தில் பொறுப்பாளர்களிடம் தகவல்களையும், கூடுதல் விவரங்களையும் கேட்டு தெரிந்து கொண்டு சென்றனர். இ-சேவை மையங்களுக்கு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட குடும்ப தலைவிகள் மேல்முறையீடு செய்ய வந்தனர்.

மேலும் செய்திகள்