< Back
மாநில செய்திகள்
வீடு புகுந்து பெண்ணை சுத்தியலால் தாக்கி 7 பவுன் நகை பறிப்பு
திருவாரூர்
மாநில செய்திகள்

வீடு புகுந்து பெண்ணை சுத்தியலால் தாக்கி 7 பவுன் நகை பறிப்பு

தினத்தந்தி
|
8 Sept 2023 12:15 AM IST

வீடு புகுந்து பெண்ணை சுத்தியலால் தாக்கி 7 பவுன் நகை பறிப்பு

திருவாரூரில், பட்டப்பகலில் வீடு புகுந்து பெண்ணை சுத்தியலால் தாக்கி 7 பவுன் நகையை பறித்து சென்ற துணிகர சம்பவம் நடந்துள்ளது.. புர்கா அணிந்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெண்

திருவாரூர் நகர் ஆறுமுக நாடார் தெருவை சேர்ந்தவர் ஜாஸ்மின் பேகம் (வயது 35). இவருடைய கணவர் சாகுல் ஹமீது. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இவர்கள் 3 பேரும் திருவாரூரில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து வருகின்றனர். நேற்று காலையில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதற்காக சென்று விட்டு ஜாஸ்மின் பேகம் வீடு திரும்பினார்.

சுத்தியலால் தாக்கி 7 பவுன் நகைகள் பறிப்பு

அப்போது அவரது வீட்டிற்குள் புர்கா அணிந்து இருந்த மர்ம நபர் ஒருவர் மறைந்து இருந்துள்ளார். ஜாஸ்மின் பேகம் உள்ளே நுழைந்ததும் அவரின் தலையில் மர்ம நபர், சுத்தியலால் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் ஜாஸ்மின் பேகம் சம்பவ இடத்திலேயே மயங்கிய நிலையில் கீழே விழுந்துள்ளார். அப்போது அவர் கழுத்து மற்றும் காதில் அணிந்திருந்த 7 பவுன் நகைகளை பறித்துக்கொண்டு அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடி வி்ட்டார்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

இதை அறிந்த அக்கம், பக்கத்தினர் காயம் அடைந்த ஜாஸ்மின் பேகத்தை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மர்மநபருக்கு வலைவீச்சு

மேலும் வீட்டின் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்