< Back
மாநில செய்திகள்
வீடு புகுந்து 26½ பவுன் நகை கொள்ளை
திருநெல்வேலி
மாநில செய்திகள்

வீடு புகுந்து 26½ பவுன் நகை கொள்ளை

தினத்தந்தி
|
26 Oct 2023 12:38 AM IST

வடக்கன்குளம் அருகே வீடு புகுந்து 26½ பவுன் நகைகளை துணிகரமாக கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வடக்கன்குளம்:

கூலி தொழிலாளி

நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் அருகே பழவூரை அடுத்த கன்னங்குளத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 37), கூலி தொழிலாளி. இவருடைய மனைவி பவித்ரா. கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் மணிகண்டன் படுகாயமடைந்தார்.

உடனே அவருக்கு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நகை, பணம் கொள்ளை

இதையடுத்து ஆஸ்பத்திரியில் பவித்ரா தங்கியிருந்து கணவர் மணிகண்டனை கவனித்து வந்தார். தொடர்ந்து சிகிச்சைக்கு தேவையான பணத்தை எடுத்து வருவதற்காக பவித்ரா நேற்று முன்தினம் மாலையில் தனது வீட்டுக்கு சென்றார்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் திறந்து கிடந்தது. அதில் இருந்த ரூ.26½ பவுன் நகைகள், ரூ.11 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.8 லட்சம் இருக்கும். மணிகண்டனின் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நைசாக கதவை திறந்து உள்ளே புகுந்து நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

போலீஸ் வலைவீச்சு

இதுகுறித்து பழவூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு யோகேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கொள்ளை நடந்த வீட்டில் பதிவான தடயங்களை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையும் சேகரித்து பார்வையிட்டனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீடு புகுந்து திருடிய கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். வடக்கன்குளம் அருகே வீடு புகுந்து 26½ பவுன் நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்