நாமக்கல்
ஜேடர்பாளையத்தில் ஆக்கிரமிப்பு வீடு, கடைகள் இடித்து அகற்றம்
|ஜேடர்பாளையத்தில் ஆக்கிரமிப்பு வீடு, கடைகள் இடித்து அகற்றம்
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் சரளைமேடு மற்றும் காமராஜர் நகர் பகுதியில் தார்சாலையின் இருபுறமும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் சுமார் 100-க்கு மேற்பட்டோர் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட வீடுகள் மற்றும் கடைகளை காலி செய்யுமாறு அறிவுறுத்தி வந்தனர். இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள குடியிருப்புகளை அப்புறப்படுத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து நேற்று காலை அதிகாரிகள் பொக்லைன் எந்திரங்களுடன் அங்கு சென்று ஆக்கிரமித்து கட்டப்பட்ட 11 வீடுகள் மற்றும் 2 அரிசி கடைகள், ஒரு இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடை மற்றும் ஒரு திருமண வாடகை பாத்திர கடை உள்பட மொத்தம் 15 வீடு, கடைகள் இடித்து அகற்றப்பட்டன. மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்க பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் பரமத்திவேலூர் தாசில்தார் சிவக்குமார், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சந்திரசேகர், உதவி பொறியாளர் பாலகிருஷ்ணன், உதவி கோட்ட பொறியாளர் மாணிக்கம் மற்றும் நெடுஞ்சாலை துறை ஆய்வாளர் ஞானசுப்ரமணி, வருவாய் துறையினர் மற்றும் மின்சார வாரிய ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.