திருவள்ளூர்
ஆர்.கே.பேட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஓட்டல் உரிமையாளர் பலி
|ஆர்.கே.பேட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஓட்டல் உரிமையாளர் பலியானார்.
பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை அருகே சோளிங்கபுரத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 60). சோளிங்கரில் பிரபல ஓட்டல் உரிமையாளரான இவர் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் திருத்தணி நோக்கி சென்றார்.
வழியில் ஆர்.கே. பேட்டை அடுத்த சமத்துவபுரம் அருகே வரும்போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ராதாகிருஷ்ணனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக அவரை வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து இவரது மகன் வினோத் குமார் (20) ஆர்.கே.பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ராதாகிருஷ்ணன் மீது மோதி விட்டு சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.