< Back
மாநில செய்திகள்
கடம்பத்தூரில் குடும்ப தகராறில் ஓட்டல் உரிமையாளர் தற்கொலை - டி.வி. பார்க்க மனைவி ரிமோட் தர மறுத்ததால் விபரீதம்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

கடம்பத்தூரில் குடும்ப தகராறில் ஓட்டல் உரிமையாளர் தற்கொலை - டி.வி. பார்க்க மனைவி 'ரிமோட்' தர மறுத்ததால் விபரீதம்

தினத்தந்தி
|
17 Oct 2023 2:43 PM IST

கடம்பத்தூரில் டி.வி.யில் தான் விரும்பிய நிகழ்ச்சியை பார்க்க மனைவியிடம் ரிமோட் கேட்டு ஏற்பட்ட தகராறில் ஓட்டல் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூரை சேர்ந்தவர் ஆசீர்வாதம் (வயது 40). இவர் அதே பகுதியில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு நிஷா (29) என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். கடந்த 14-ந் தேதி இரவு கணவன் மனைவி இருவரும் ஒன்றாக அமர்ந்து டி.வி பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது நிஷா தான் விரும்பிய சேனலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஆசீர்வாதம் தான் விரும்பிய வேறு ஒரு நிகழ்ச்சியை பார்க்க டி.வி சேனலை மாற்றுமாறு நிஷாவிடம் கூறினார். அதற்கு மறுப்பு தெரிவித்து நிஷா டி.வி ரிமோட்டை கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் கணவன்- மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த ஆசீர்வாதம் அந்த அறையை விட்டு வெளியே வந்தார். ஆத்திரத்தில் இருந்த அவர் அங்கு அமர்ந்து இருந்த தனது மகனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதை கண்ட நிஷா தன் கணவரிடம் ஏன் மகனை தாக்கினீர்கள் என்று தட்டி கேட்டார். இதனால் மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் கோபித்துக் கொண்ட ஆசீர்வாதம் திருவள்ளூர் பெரும்பாக்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். மறுநாள் காலையில் நிஷாவும் கொண்டஞ்சேரி கிராமத்தில் உள்ள தனது தாய் விட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டிற்கு வந்த ஆசீர்வாதம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று நீண்ட நேரமாகியும் வீடு திறக்கப்படாததை கண்ட அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது ஆசீர்வாதம் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மனைவியிடம் தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து நிஷா கடம்பத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து இறந்த ஆசீர்வாதம் உடலை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் குடும்ப பிரச்சினை காரணமாக இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்