திருவள்ளூர்
பெரியபாளையத்தில் வேலை தேடி வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த விடுதி உரிமையாளர் கைது
|பெரியபாளையத்தில் வேலை தேடி வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த விடுதி உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் புகழ் பெற்ற பவானி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் வந்து நேர்த்திக்கடனை செலுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் இந்த கோவில் அருகே புற்றீசல் போல் அனுமதி இன்றி ஏராளமான பக்தர்கள் தங்கும் விடுதி உள்ளது.
சென்னை, கொரட்டூரை சேர்ந்த 23 வயது பெண் நேற்று முன்தினம் வேலை தேடி பெரியபாளையம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சென்னை கொரட்டூர், அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த குகன் (வயது 24) என்பவர் வீட்டு வேலை வாங்கி தருவதாக கூறி கோவிலின் எதிரே உள்ள விடுதிக்கு அவரை அழைத்து வந்து தங்க வைத்தார்.
பின்னர், பெரியபாளையம், தண்டுமாநகரை சேர்ந்த விடுதி உரிமையாளர் கார்த்திக் (35) மற்றும் குகன், பெரியபாளையம் பகுதியை சேர்ந்த மவுலி ஆகியோர் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இது குறித்து பிரியதர்ஷினி பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக் மற்றும் குகனை கைது செய்து ஊத்துக்கோட்டை முதல் நிலை குற்றவியல் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர் தலைமறைவான மவுலியை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட கார்த்திக் தி.மு.க.வை சேர்ந்த முக்கிய பிரமுகர், முடி வியாபாரி, தங்கும் விடுதியின் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.