சென்னை
ரூ.1,500 கடனுக்காக ஆபாசமாக சித்தரித்ததால் ஓட்டல் மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை
|சென்னை சூளைமேட்டில் ரூ.1,500 கடனுக்காக ஆபாசமாக சித்தரித்ததால் அவமானத்தில் ஓட்டல் மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 30). இவர் அந்த பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்தார். கடந்த 3 மாதங்களாக பாண்டியனுக்கு வேலை இல்லை. இதனால் குடும்ப செலவுக்காக ஆன்லைன் கடன் செயலி மூலம் ரூ.5 ஆயிரம் வாங்கினார். கடன் வாங்கிய தொகையில் ரூ.1,500 மட்டும் இன்னும் செலுத்தவேண்டியது இருந்தது. கடன் வாங்கிய பணத்தை திருப்பி செலுத்துமாறு பாண்டியன் செல்போன் எண்ணுக்கு, கடன் செயலியில் இருந்து குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) அனுப்பப்பட்டது. உடனடியாக பணத்தை திருப்பி செலுத்தவேண்டும், இல்லையென்றால் ஆபாசமாக சித்தரிப்போம் என மிரட்டலும் விடுக்கப்பட்டு இருந்தது. பாண்டியனால் வாங்கிய பணத்தை திருப்பி செலுத்தமுடியவில்லை. எனவே அவர் பாலியல் தொழிலுக்கு அழைப்பதுபோன்று ஆபாசமாக அவரது புகைப்படத்தை சித்தரித்து அந்த கடன் செயலி அனுப்பி அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த பாண்டியன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் விரக்தியின் உச்சத்தில் இருந்த பாண்டியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சூளைமேடு போலீசார் பாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.