< Back
மாநில செய்திகள்
ஓசூர் மாணவர் தற்கொலை; நீட் தேர்வு புத்தகங்களை எரித்த நண்பர்கள்
மாநில செய்திகள்

ஓசூர் மாணவர் தற்கொலை; நீட் தேர்வு புத்தகங்களை எரித்த நண்பர்கள்

தினத்தந்தி
|
8 July 2022 3:15 AM GMT

மாணவரின் உடல் தகனம் செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் படித்த புத்தகங்களையும் அவரது நண்பர்கள் தீயிட்டு கொளுத்தினர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசுரைச் சேர்ந்த கோபி என்பவரது மகன் முரளி கிருஷ்ணா, கடந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை அவர் எழுதியுள்ளார். இருப்பினும் அந்த தேர்வில் போதுமான மதிப்பெண்களை பெற முடியாததால், இந்த ஆண்டு நீட் தேர்வை எழுதுவதற்காக மாணவர் முரளி கிருஷ்ணா தயாராகி வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் முரளி கிருஷ்ணா, தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் நடத்திய விசாரணையில், மாணவர் தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது.

அந்த கடிதத்தில், தனக்கு நீட் தேர்வு மிகவும் கஷ்டமாக இருப்பதாகவும், மருத்துவ படிப்பில் சேரும் அளவிற்கு தன்னால் மதிப்பெண் பெற முடியாது என்றும் முரளி கிருஷ்ணா குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் பிரேத பரிசோதனைக்குப் பிறகு மாணவரின் உடல் அலசநத்தம் பகுதியில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

அப்போது மாணவரின் இறுதி ஊர்வலத்தில், அவர் நீட் தேர்வுக்காக படித்த புத்தகங்களும் கொண்டு வரப்பட்டன. பின்னர் மாணவரின் உடல் தகனம் செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் படித்த புத்தகங்களையும் அவரது நண்பர்கள் தீயிட்டு கொளுத்தினர்.

மேலும் செய்திகள்