கிருஷ்ணகிரி
ஓசூரில்வெல்டிங் தொழிலாளி குத்திக்கொலைபோலீசார் விசாரணை
|ஓசூர்:
ஓசூரில் வெல்டிங் தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்டார்.
விசாரணை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஆர்.வி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் எம்.ஜி.ஆர். மார்க்கெட் உள்ளது. இங்குள்ள ஒரு கட்டிடத்தின் மாடியில் நேற்று 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தவெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் ஓசூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
குத்திக்கொலை
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்து கிடந்த வாலிபரின் தலை மற்றும் மார்பு பகுதிகளில் மதுபாட்டிலால் குத்தி காயம் ஏற்படுத்திய அடையாளங்கள் இருந்தன. எனவே அவர் நண்பர்களுடன் மது குடித்தபோது ஏற்பட்ட தகராறில் குத்திக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
இதற்கிடையே போலீசாரின் விசாரணையில் கொலை செய்யப்பட்ட வாலிபர் ஓசூர் சானசந்திரம் பகுதியை சேர்ந்த சபீர் என்பவரது மகன் முபாரக் (வயது 18) என்பது தெரியவந்தது. இவர் ஓசூரில் வெல்டிங் தொழிலாளியாக வேலை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.
பரபரப்பு
மேலும் அவர் கொலை செய்யப்பட்டு 2 அல்லது 3 நாட்கள் ஆகியிருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும் முபாரக் ஏன் கொலை செய்யப்பட்டார்? அவரை கொலை செய்தது யார்? பெண் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.