கிருஷ்ணகிரி
ஓசூர் மாநகராட்சி கூட்டத்தில்தி.மு.க.-அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம்
|ஓசூர்:
ஓசூர் மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க.-அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாநகராட்சி கூட்டம்
ஓசூர் மாநகராட்சியின் சாதாரண கூட்டம் அண்ணா கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டதிற்கு மேயர் எஸ்.ஏ.சத்யா தலைமை தாங்கினார். துணை மேயர் ஆனந்தய்யா மற்றும் ஆணையாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மேயர் பேசினார்.
அப்போது ஓசூர், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மாநகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று புதிய பஸ் நிலையம் அமைக்க ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அனுமதி வழங்கிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார்.
தொடர்ந்து மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் நாராயணன் (அ.தி.மு.க) மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பகுதிகளில் உள்ள அடிப்படை பிரச்சினைகள் குறித்து பேச முயன்றார். இதற்கு, தி.மு.க. கவுன்சிலர்கள் நாகராஜ், ரவி, வெங்கடேஷ் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட வார்டுகளை பற்றி மட்டுமே பேச வேண்டும். மற்ற வார்டு பிரச்சினைகளில் தலையிடக்கூடாது என்று அவர்கள் ஆட்சேபணை தெரிவித்து கூச்சலிட்டனர்.
தகவல் தெரிவிக்க வேண்டும்
இதனால் கூட்டத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதத்தால் கூச்சல், குழப்பம் நிலவியது. இதன் காரணமாக கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மேயர் கவுன்சிலர்களை சமாதானம் செய்தார். பின்னர் கூட்டம் தொடர்ந்து நடந்தது.
கூட்டத்தில் வரிவிதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா (தி.மு.க.) பேசுகையில், ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் துப்புரவு பணியை, சிறப்பாகவும் செம்மையாகவும் மேற்கொண்டு வரும் சானிட்டரி இன்ஸ்பெக்டர் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்களை பணியிட மாற்றம் செய்யக்கூடாது. புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும்போது கவுன்சிலர்கள் அனைவருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். அரசு கலைக்கல்லூரி அமைந்துள்ள மிடுகரப்பள்ளியில் கருணாநிதி பெயரில் வளைவு ஒன்று அமைக்க வேண்டும். தளி ரோட்டில் உள்ள டி.வி.எஸ். சிறுவர் பூங்கா பராமரிப்பு பணியை, டைட்டான் நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், எதற்கு ரூ.20 லட்சம் மாநகராட்சி நிதியில் ஒதுக்கப்பட்டுள்ளது? என்று கேள்வி எழுப்பினார்.
பணிகள் தொடங்கும்
கூட்டத்தில், கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து மேயர் சத்யா பேசுகையில், மாநகராட்சி பகுதிகளில் வளர்ச்சி பணிகள் படிப்படியாக நிறைவேற்றி தரப்படும். மாநகராட்சி 4 மண்டலங்களுக்கான அலுவலகங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும். மாநகராட்சி கூட்டத்தை மாதந்தோறும் நடத்த வேண்டும் என்ற கட்டாயமில்லை. 3 மாதத்திற்கு ஒரு முறை நடத்தலாம் என்று விதிமுறை உள்ளது என்று பேசினார்.
கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஜெயப்பிரகாஷ், மஞ்சுநாத், முருகம்மாள் மதன், மாதேஸ்வரன், மோசின் தாஜ் உள்ளிட்டவர்கள் தங்கள் வார்டு பிரச்சினைகள், தேவைகள் குறித்து பேசினார்கள். கூட்டத்தில் 199 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.