< Back
மாநில செய்திகள்
உறவினர் அல்லாதவர் சிறுநீரக தானத்துக்கு முன்வந்ததால், டாக்டருக்கு அறுவைசிகிச்சை செய்ய ஆஸ்பத்திரிகள் மறுத்தது சட்டவிரோதம் - ஐகோர்ட்டு
மாநில செய்திகள்

உறவினர் அல்லாதவர் சிறுநீரக தானத்துக்கு முன்வந்ததால், டாக்டருக்கு அறுவைசிகிச்சை செய்ய ஆஸ்பத்திரிகள் மறுத்தது சட்டவிரோதம் - ஐகோர்ட்டு

தினத்தந்தி
|
11 Oct 2023 3:45 AM IST

உறவினர் அல்லாதவர் சிறுநீரகம் தானம் கொடுக்க வந்ததால், டாக்டருக்கு அறுவைசிகிச்சை செய்ய ஆஸ்பத்திரிகள் மறுத்தது சட்டவிரோதம் என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

உறுப்பு தானம்

கோவையைச் சேர்ந்தவர் டாக்டர் காஜா மொய்னுதீன். இவர் 2022-ம் ஆண்டு முதல் சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார். இவருக்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ள டாக்டர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இதற்காக இவரது மனைவி, மகன், மகள் உள்ளிட்டோரிடம் இருந்து சிறுநீரகம் பெற முயற்சித்தும் மருத்துவ காரணங்களால் அது முடியவில்லை. இந்நிலையில் ராமாயி என்பவர் தன் சிறுநீரகத்தை டாக்டருக்கு தானம் கொடுக்க முன்வந்தார். ஆனால், ராமாயி, டாக்டர் காஜா மொய்னுதீனுக்கு உறவினர் இல்லை என்பதால், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்ய தமிழ்நாட்டில் உள்ள பல ஆஸ்பத்திரிகள் மறுத்துவிட்டன.

மறுப்பு

அதையடுத்து அவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், கேரளாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி பல்வேறு சோதனைகளை செய்து, ராமாயி சிறுநீரகம் எனக்கு சரியாக பொருந்தும் என்று அறிக்கை கொடுத்துள்ளது. இந்த அறுவைசிகிச்சைக்கு அனுமதி கேட்டு கேரளாவில் உள்ள கமிட்டியிடம் அந்த ஆஸ்பத்திரி விண்ணப்பம் செய்தபோது, ராமாயியிடம் இருந்து உறுப்பு தானமாக பெறுவதற்கு தடையில்லா சான்று பெற்று வரவேண்டும் என்று கூறியுள்ளது.

தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஒப்புதல் தரும் கமிட்டியிடம் விண்ணப்பம் செய்யப்பட்டது. ஆனால், இதுபோன்ற தடையில்லா சான்று தேவையில்லை என்று கூறி அதை வழங்க அந்த கமிட்டி மறுத்துவிட்டது என்று கூறியிருந்தார்.

போராட்டம்

இந்த வழக்கு நீதிபதி என்.சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் காஜா மொய்தீன் ஹிஸ்தி ஆஜராகி வாதிட்டார். அதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

பல மனித உயிர்களை மருத்துவ சிகிச்சை மூலம் காப்பாற்றிய டாக்டர் ஒருவர் தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள தற்போது போராடுவது வேதனைக்குரியது. உடல் உறுப்பு தானம் சட்டத்தில் உறவினர்கள் மட்டும்தான் உறுப்பு தானம் செய்ய வேண்டும் என்று கூறப்படவில்லை.

சட்டவிரோதம்

அப்படியிருக்கும்போது, அந்த சட்டத்தின் நோக்கத்தையே சிதைக்கும்விதமாக ஆஸ்பத்திரிகள் நிர்வாகமும், அரசும் செயல்பட்டுள்ளன. உறவினர் அல்லாதவரின் சிறுநீரகத்தை பெறுவதால் அறுவைசிகிச்சை செய்ய ஆஸ்பத்திரிகள் மறுத்துள்ளன. உறவினர்கள் அல்லாதோரும் உடல் உறுப்புகளை தானம் செய்ய விதிகளில் வழிவகை செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைகளை மேற்கொள்ள மறுப்பது சட்டவிரோதம் ஆகும்.

விழிப்புணர்வு

எனவே, மனுதாரர் மற்றும் ராமாயி ஆகியோர் ஒரு வாரத்துக்குள் மருத்துவக்குழு முன்பாக ஆஜராக வேண்டும். அவர்களிடம் கோவை வட்டாட்சியர் உரிய விசாரணை நடத்தி, உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை சட்டவிதிகளின் கீழ், அதற்கான அங்கீகார குழுவுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். அந்த அறிக்கை மீது அங்கீகாரக்குழு 4 வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

போதிய சட்ட விழிப்புணர்வு இல்லாத சூழலிலும் உறவினர்கள் அல்லாதோர் உடல் உறுப்புகளை தானமாக அளிக்க முன்வரும்போது, ஆஸ்பத்திரி நிர்வாகங்கள் இதுபோன்ற அறுவைசிகிச்சைகளை சக டாக்டருக்கே மேற்கொள்ள தயக்கம் காட்டுவது மனிதாபிமானமற்றது. எனவே, இதுதொடர்பாக டாக்டர்களுக்கும், ஆஸ்பத்திரிகளுக்கும் தமிழ்நாடு அரசு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்