சென்னை
மெரினாவில் போலீஸ்காரரை இரும்பு கம்பியால் அடித்து-உதைத்த குதிரை ஓட்டுனர் கைது
|மெரினாவில் போலீஸ்காரரை இரும்பு கம்பியால் அடித்து-உதைத்த குதிரை ஓட்டுனரால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை,
சென்னையை அடுத்த திருநின்றவூரைச் சேர்ந்தவர் தீபக் (வயது 27). இவர் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக பணி செய்கிறார். நேற்று முன்தினம் தீபக் சென்னை மெரினா கடற்கரைக்கு வந்தார். கலங்கரை விளக்கம் பின்புறம் கடற்கரை மணலில் உட்கார்ந்து காற்று வாங்கினார். தனது நண்பர்கள் வருகைக்காக அங்கு காத்திருந்தார். அப்போது குதிரையில் குழந்தைகளை உட்கார வைத்து விளையாட்டு காட்டிக்கொண்டிருந்த குதிரை ஓட்டுனர் கிஷோர் (20) என்பவருக்கும், போலீஸ்காரர் தீபக்கிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தீபக் போலீஸ்காரர் என்பது கிஷோருக்கு தெரியாது.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி இருவரும் கைகலப்பில் ஈடுபட்டனர். கிஷோர், குதிரை ஓட்டுவதற்காக கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால், தீபக்கை அடித்து நொறுக்கி விட்டதாக கூறப்படுகிறது. இதில் தீபக் பலத்த காயம் அடைந்தார். ரத்தகாயத்துடன் கடற்கரை மணலில் சுருண்டு கிடந்தார். கிஷோர், குதிரையில் ஏறி தப்பி ஓடப்பார்த்தார். அங்கு திரண்டு வந்த பொதுமக்கள் கிஷோரை பிடித்து மெரினா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். காயம் அடைந்த போலீஸ்காரர் தீபக், ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக, மெரினா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். கிஷோர் கைது செய்யப்பட்டார். அவர் பெரம்பூரைச் சேர்ந்தவர்.