புதுக்கோட்டை
குதிரை, மாட்டு வண்டி பந்தயம்
|கைக்குறிச்சி சுந்தர மாகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு குதிரை, மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
திருவரங்குளம்:
சுந்தர மாகாளியம்மன் கோவில் திருவிழா
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே கைக்குறிச்சியில் முனீஸ்வரர், விநாயகர், சுந்தர மாகாளியம்மன் கோவில் ஆடி மாத கரக திருவிழா கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வந்தது. தினமும் சாமி அம்பாள் வீதி உலா நடைபெற்றது. பக்தர்கள் விரதம் இருந்து வீடுகள் தோறும் கரகம் வைத்து அர்ச்சனை செய்து சாமி தரிசனம் மேற்கொண்டனர். திருவிழாவின் நிறைவு நாளை முன்னிட்டு பக்தர்கள் கரகம் எடுத்து வந்தனர். பின்னர் தீமிதி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மாட்டு வண்டி பந்தயம்
திருவிழாவை முன்னிட்டு அறந்தாங்கி சாலையில் குதிரை, மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில், பெரிய மாட்டு வண்டி பந்தயம், சிறிய மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், அறந்தாங்கி, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து சென்றன. இதில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகளும், வண்டி ஓட்டிய சாரதிக்கு பரிசு வழங்கப்பட்டது.
குதிரை வண்டி பந்தயம்
இதேபோல் பெரிய குதிரை வண்டி, சிறிய குதிரை வண்டி, கரிச்சான் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் குதிரை வண்டிகள் எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன. இதில் வெற்றி பெற்ற குதிரை வண்டி உரிமையாளர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
குதிரை, மாட்டு வண்டி பந்தயத்தை ஏராளமான ரசிகர்கள் சாலையில் நின்று கண்டு களித்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், மண்டகபடிதாரர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வல்லத்திராக்கோட்டை போலீசார் செய்திருந்தனர்.