சென்னை
திருவேற்காட்டில் பயங்கரம்: தந்தையை கொடூரமாக அடித்து கொன்ற வாலிபர் - குடிபோதையில் வெறிச்செயல்
|திருவேற்காட்டில் குடிபோதையில் தந்தையை கொடூரமாக அடித்து கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருவேற்காடு காமதேனு நகரை சேர்ந்தவர் டில்லி (வயது 63). இவரது மகன் பிரகாஷ் (35). டிரைவராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி தேவி மற்றும் குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், பிரகாஷ் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். மேலும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி எப்போதும் குடித்துவிட்டு வந்து அடிக்கடி தந்தை மற்றும் மனைவியுடன் சண்டை போட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்த நிலையில், ஆத்திரமடைந்த அவரது மனைவி தேவி குழந்தைகளை அழைத்து கொண்டு திருவேற்காடு பெருமாளகரத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார்.
மனைவியும் கோபித்து கொண்டு சென்று விட்டதால் கடும் ஆத்திரத்தில் இருந்த பிரகாஷ் நேற்று மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தபோது, தனியாக இருந்த அவரது தந்தை டில்லியுடன் போதையில் தகராறு செய்துள்ளார். இதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த பிரகாஷ் பெற்ற தந்தை என்றும் பார்க்காமல் டில்லியின் தலையை சுவற்றில் மோத வைத்து கொடூரமாக அடித்து உதைத்துள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் டில்லி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து திருவேற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவேற்காடு போலீசார் டில்லியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருவேற்காடு போலீசார் பிரகாஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.