சென்னை
குடும்பத் தகராறில் பயங்கரம்: 2-வது மனைவியை மின்சாரம் பாய்ச்சி கொன்ற கணவர்
|குடும்பத் தகராறில் 2-வது மனைவியின் உடலில் மின்சாரம் பாய்ச்சி கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை வண்ணாரப்பேட்டை கத்திவாக்கம் மெயின் ரோடு காத்பாடா பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 48). இவர், தனியார் தோல் கடையில் தையல்காரராக வேலை செய்து வருகிறார். இவருடைய முதல் மனைவி இறந்து விட்டார்.
அதன்பிறகு 2016-ம் ஆண்டு பழைய வண்ணாரப்பேட்டை நைனியப்பன் கார்டனைச் சேர்ந்த ஹசினாபேகம்(37) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார்.
கடந்த 27-ந்தேதி இரவு கணவன்-மனைவி இருவரும் வீட்டில் படுத்து தூங்கினர். மறுநாள் காலை ஹசினாபேகம் படுக்கை அறையில் அசைவற்று கிடந்தார். அவரை எழுப்பியும் எழுந்திருக்கவில்லை. படுக்கையிலேயே அவர் இறந்து கிடப்பதாக ஹசினாபேகத்தின் பெற்றோருக்கு ஷாஜகான் தகவல் தெரிவித்தார்.
அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஹசினாபேகத்தின் தாயார் ஷாபிராபேகம், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், ஹசினாபேகம் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை நடத்திய டாக்டர்கள், ஹசினாபேகம் உடலில் மின்சாரம் பாய்ந்து இருப்பதாகவும், கை மற்றும் கழுத்தில் அதற்கான காயம் இருப்பதாகவும், உடலில் மின்சாரம் பாய்ந்ததாலேயே அவர் இறந்து இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து வண்ணாரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி மற்றும் போலீசார் ஷாஜகானை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அதில், சம்பவத்தன்று இரவு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த ஷாஜகான், மனைவி ஹசினாபேகம் தூங்கியபிறகு முகத்தில் தலையணையை வைத்து அமுக்கினார். இதில் அவர் மயங்கியதும், அவரது உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொலை செய்ததும், பின்னர் படுக்கையிலேயே அவர் இறந்து கிடப்பதாக கூறி நாடகமாடியதும் தெரிந்தது. இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், ஷாஜகானை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.