கிருஷ்ணகிரி
சர்வதேச முதியோர் தின விழாவில்107 வயது மூதாட்டிக்கு கலெக்டர் பொன்னாடை அணிவித்து கவுரவிப்பு
|சர்வதேச முதியோர் தின விழாவில் 107 வயது மூதாட்டிக்கு கலெக்டர் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த சர்வதேச முதியோர் தின விழாவில் 107 வயது மூதாட்டிக்கு கலெக்டர் சரயு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.
முதியோர் தின விழா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சர்வதேச முதியோர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி வேப்பனப்பள்ளி அருகே நாடுவானப்பள்ளி ஊராட்சி ராமச்சந்திரம் கிராமத்தில் 107 வயது நிரம்பிய மூத்த வாக்காளர் முத்தம்மாள் என்பவருக்கு கலெக்டர் சரயு பொன்னாடை அணிவித்து இனிப்பு வழங்கி கவுரவித்தார்.
தொடர்ந்து கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியை கலெக்டர் குத்துவிளக்கேற்றி முதியோர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-
நமது கடமை
இந்திய தேர்தல் ஆணையம் சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு அக்டோபர் 1-ந் தேதியன்று 100 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்களை கவுரவிக்க அறிவுறுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 66 மூத்த வாக்காளர்களை நேரில் சந்தித்து கவுரவிக்கும் விதமாக பொன்னாடை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டுள்ளது-.
தமிழக அரசு 65 வயதை கடந்த ஆதரவற்றோருக்கு மாதம் ரூ.1,000 வரை உதவித்தொகை மற்றும் இலவச அரிசி வழங்குகிறது. அரசு மருத்துவமனைகளில் முதியோர்களுக்கு தனி படுக்கை வசதி மற்றும் மருத்துவ வசதி செய்து தரப்படுகிறது. எனவே முதியோர்களை பேணிகாப்பது நமது கடமையாகும். இவ்வாறு அவர் கூறினார்.
சிறப்பு மருத்துவ முகாம்
முன்னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில், சுகாதார பணிகள் துறை சார்பில் முதியோர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை கலெக்டர் சரயு தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் விஜயலட்சுமி, தாசில்தார் விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேடியப்பன், சதீஸ்பாபு, துணை தாசில்தார் மகேஸ்வரி, வருவாய் ஆய்வாளர் குமார், வக்கீல் சுரேகா, சாரதா முதியோர் இல்ல ஒருங்கிணைப்பாளர் கவுதமன், சுகி முதியோர் இல்ல நிர்வாகி ஆனந்த நாராயணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.