திருப்பூர்
தீர்த்தம் எடுக்கச் சென்ற பக்தர்களை தேனீக்கள் விரட்டி விரட்டி கொட்டியது
|மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றில் தீர்த்தம் எடுக்கச் சென்றபக்தர்களை தேனீக்கள் விரட்டி விரட்டி கொட்டிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றில் தீர்த்தம் எடுக்கச் சென்றபக்தர்களை தேனீக்கள் விரட்டி விரட்டி கொட்டிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மண்டல பூஜை
மடத்துக்குளத்தையடுத்த நீலம்பூர் பகுதியில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில்கும்பாபிஷேகம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து 48 நாள் மண்டல பூஜைகள் நடைபெற்று வந்தது. அதன்படி நேற்று சிறப்பு யாக பூஜைகள் செய்யும் வகையில் கோவிலிருந்து 150-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்தக் குடங்களுடன் அருகிலுள்ள கண்ணாடிப்புத்தூர் அமராவதிஆற்றங்கரைக்கு சென்றனர்.
அப்போது அங்குள்ள மரத்தில் கூடு கட்டியிருந்த தேனீக்கள் எதிர்பாராதவிதமாக கலைந்து வந்து கூட்டத்திலிருந்தவர்களைக் கொட்டத் தொடங்கியது. இதனால் வலி தாங்காமல் அலறித் துடித்த பக்தர்கள் சிதறி ஓடினார்கள்.
அரசு ஆஸ்பத்திரி
ஆனாலும் விடாமல் துரத்திய தேனீக்கள் அவர்களை விரட்டி விரட்டிக் கொட்டியது. இதில் பலத்த காயமடைந்தவர்களை அருகிலிருந்தவர்கள் மீட்டு மடத்துக்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தேனீக்களின் தாக்குதலில் 76 பேர் காயமடைந்த நிலையில் 68 பேர் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினர். மேலும் 7 பேருக்கு மடத்துக்குளம் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும் அதிக பாதிப்புக்குள்ளான நபர் ஒருவர் மட்டும் மேல் சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை மடத்துக்குளம் தொகுதி சி.மகேந்திரன் எம்.எல்.ஏ., ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஈஸ்வரசாமி ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர். தீர்த்தம் எடுக்கச் சென்றபக்தர்களை தேனீக்கள் கொட்டிய சம்பவத்தால் மடத்துக்குளம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.