ஓரினச்சேர்க்கை மோகம்: நண்பரை கழுத்தை நெரித்து கொன்று தற்கொலை செய்து கொண்ட என்ஜினீயர்..!
|இருவரும் சென்னை முகப்பேரில் ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தனர்.
அம்பத்தூர்,
சென்னை அமைந்தகரை எம்.எம். காலனியை சேர்ந்தவர் லோகேஷ் (வயது 25). இதேபோல் அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வாஞ்சிநாதன் (27). என்ஜினீயர்களான இவர்கள் இருவரும் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். கடந்த 8-ந் தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்ற லோகேஷ், வாஞ்சிநாதன் இருவரும் அதன்பிறகு வீடு திரும்பி வரவில்லை. அதிர்ச்சி அடைந்த இருவரது பெற்றோரும் அவர்களை தேடினர். இருவரது செல்போன்களும் 'சுவிட்ச்ஆப்' செய்யப்பட்டு இருந்தது.
இதனால் தங்கள் மகன்கள் மாயமானதாக லோகேஷின் பெற்றோர் அமைந்தகரை போலீசிலும், வாஞ்சிநாதனின் பெற்றோர் அம்பத்தூர் போலீசிலும் புகார் கொடுத்தனர். அதன்பேரில் 2 போலீசாரும் வழக்குப்பதிவு செய்து மாயமான என்ஜினீயர்கள் 2 பேரையும் தேடி வந்தனர்.
இந்தநிலையில் வாஞ்சிநாதன், நேற்று முன்தினம் காலை தனது சகோதரி காமாட்சிக்கு, தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக 'வாட்ஸ் அப்'பில் தகவல் அனுப்பினார். பின்னர் செல்போனை 'சுவிட்ச்ஆப்' செய்து விட்டார். அதிர்ச்சி அடைந்த காமாட்சி, இதுபற்றி அம்பத்தூர் போலீசில் தெரிவித்தார். உடனடியாக போலீசார் வாஞ்சிநாதன் செல்போன் எண் சிக்னலை வைத்து அவர், சென்னை முகப்பேர் பன்னீர் நகரில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கி இருப்பது தெரிந்து அங்கு சென்றனர்.
அறை கதவு உள்புறமாக பூட்டி இருந்ததால் விடுதி ஊழியர்கள் உதவியுடன் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அறையில் லோகேஷ் தரையில் பிணமாக கிடந்தார். வாஞ்சிநாதன் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். லோகேஷ் கழுத்தில் 'ஷூ லேஸ்' துணி கயிறு இருந்தது. பின்னர் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து நொளம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
ஒரே நிறுவனத்தில் வேலை செய்து வந்த லோகேஷ் மற்றும் வாஞ்சிநாதன் இருவரும் நண்பர்களாக பழகினர். அப்போது இருவருக்கும் ஓரினச்சேர்க்கை பழக்கம் ஏற்பட்டதாகவும், அடிக்கடி இருவரும் விடுதியில் அறை எடுத்து தங்கி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் வாஞ்சிநாதனுக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதற்காக பெண் பார்த்து வந்தனர். ஆனால் லோகேஷ், தொடர்ந்து வாஞ்சிநாதனை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தனது திருமண வாழ்க்கை பாதிக்கப்படலாம் என கருதிய வாஞ்சிநாதன், லோகேசை தீர்த்து கட்ட முடிவு செய்தார். இதற்காக ஒரினச்சேர்க்கையில் ஈடுபடலாம் என கூறி லோகேசுடன் கடந்த 8-ந் தேதி இரவு முகப்பேரில் உள்ள விடுதியில அறை எடுத்து தங்கி உள்ளார்.
அப்போது விடுதி அறையில் லோகேசை, 'ஷூ லேஸ்' துணி கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்த வாஞ்சிநாதன், பின்னர் தனது சகோதரிக்கு செல்போனில் தகவல் சொல்லிவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என கருதுவதாக போலீசார் தெரிவித்தனர். இதுபற்றி போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.