சேலம்
ஓமியோபதி மாணவி தற்கொலை முயற்சி
|ஓமியோபதி மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
சேலம் அருகே உடையாப்பட்டியை சேர்ந்த 24 வயதுடைய மாணவி ஒருவர் ராசிபுரம் பகுதியில் உள்ள தனியார் ஓமியோபதி மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த மாணவி வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மாணவியின் படிப்பு இன்னும் 5 மாதத்தில் முடிவடைய உள்ளது. இதற்கிடையில் அவரது இறுதியாண்டு கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல் பெற்றோர் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால் படிப்பு முடிவடைந்தவுடன் அவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தாதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் திருமணம் செய்ய மறுத்ததுடன் மேல்படிப்பு படிக்க விரும்பினார். இதற்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அந்த மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. மேலும் இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.