குடிசையில்லா தமிழ்நாடு: 2030-க்குள் தமிழகத்தில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள்- பட்ஜெட்டில் அறிவிப்பு
|இந்த புதிய திட்டம் "கலைஞரின் கனவு இல்லம்" என்ற பெயரில் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சென்னை,
2024-25-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார். பட்ஜெட்டின் பல்வேறு சிறப்பம்சங்கள் குறித்து அவர் உரையாற்றி வருகிறார்.
அதில், 2030-க்குள் தமிழகத்தில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் கூறுகையில்,
"கடந்த 2010-ம் ஆண்டில் குடிசையில்லா மாநிலம் என்ற இலக்கை எய்திடும் வகையில் கலைஞர் வீடு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டின் ஊரக பகுதிகளில் குடிசைகளை மாற்றி அனைவருக்கும் பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்து தரும் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட சமீபத்திய கணக்கெடுப்பின்படி கிராம புறங்களில் ஏறத்தாழ 8 லட்சம் குடிசைகளில் மக்கள் வாழ்ந்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.
குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்கை எய்திடும் வகையில் வரும் 2030-ம் ஆண்டிற்குள் தமிழகத்தின் ஊரக பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்.
முதற்கட்டமாக 2024-25-ம் நிதியாண்டில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் ரூ.3.50 லட்சம் செலவில் உருவாக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் சொந்தமாக வீட்டுமனை இல்லாத பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை வழங்குவதுடன், வீடு கட்டுவதற்கான தொகை அவர்தம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.
இந்த புதிய திட்டம் "கலைஞரின் கனவு இல்லம்" என்ற பெயரில் வரும் நிதியாண்டில் 3,500 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்." என்றார்.