சேலத்தில் ஊர்காவல் படை பெண் காவலருக்கு கத்திக்குத்து - ஒருவர் கைது
|சேலத்தில் ஊர்காவல் படை பெண் காவலரை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
சேலம்,
சேலம் வீராணம் அருகே உள்ள சுக்கம்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி அஞ்சலிதேவி (வயது 37). இவர் சேலம் மாநகர ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு இன்று காலை சேலம் டவுன் பகுதியில் பணி ஒதுக்கப்பட்டது.
அங்கு காலை பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக 11.30 மணி அளவில் சேலம் பழைய பஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது அங்கு இருந்த வாலிபர் ஒருவர் அஞ்சலி தேவியுடன் தகராறில் ஈடுபட்டார். பின்னர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அஞ்சலி தேவியை குத்தினார். இதில் மார்பு பகுதிக்கு அருகில் கத்திகுத்து விழுந்தது. இதில் நிலைகுலைந்து போன அஞ்சலிதேவி மயங்கி விழுந்தார்.
இதைக் கண்ட அருகில் இருந்தவர்கள், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அஞ்சலி தேவியை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அஞ்சலி தேவியை கத்தியால் குத்திய வாலிபர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த டவுன் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கத்தியால் குத்திய வாலிபரை வலை வீசி தேடி வருகிறார்கள்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், அஞ்சலிதேவி கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்ற வாலிபருக்கு ரூ.2 லட்சம் பணம், 2 பவுன் தங்க நகைகளை கொடுத்துள்ளார். தன்னிடம் வாங்கிய பணத்தையும், நகையையும் சதீஷ் திருப்பி தராததால், அஞ்சலிதேவி சதீஷை வரவழைத்து பணத்தை கேட்டபோது ஏற்பட்ட தகராறில் கத்திக்குத்து விழுந்தது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பணம் கொடுத்ததது குறித்து அஞ்சலிதேவி ஏற்கனவே வீராணம் போலீசில் புகார் செய்திருந்தார்.
போலீசார் விசாரித்து வந்த நிலையில் இந்த கத்தி குத்து சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் பழைய பஸ் நிலையத்தில், சீருடையில் இருந்த ஊர்க்காவல் படை பெண்ணை வாலிபர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.