சேலம்
ஊர்க்காவல் படை பெண்ணுக்கு கத்திக்குத்து
|சேலத்தில் ஊர்க்காவல் படை பெண்ணை கத்தியால் குத்திய நண்பரை போலீசார் கைது செய்தனர்.
ஊர்க்காவல் படை பெண்
சேலம் அருகே உள்ள சுக்கம்பட்டி காந்தி நகரை சேர்ந்தவர் மணி. அவருடைய மனைவி அஞ்சலிதேவி (வயது 37). இவர் மாநகர ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகிறார். அஞ்சலிதேவி நேற்று காலை கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்தார். அப்போது அங்கு கிச்சிப்பாளையம் சின்ன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அவருடைய நண்பர் சதீஷ் (39) என்பவர் வந்தார்.
இருவரும் பேசி கொண்டிருந்த போது திடீரென அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை பார்த்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து அஞ்சலி ஊருக்கு செல்வதற்காக பழைய பஸ் நிலையம் வந்தார். அங்கு மீண்டும் வந்த சதீஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரெனெ அஞ்சலி தேவியை குத்தினார்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
இதையடுத்து சதீஷ் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். பின்னர் கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த அஞ்சலி தேவியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் டவுன் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதில், கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ் ரேஷன் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். அப்போது அவர், அஞ்சலி தேவியிடம் ரேஷன் கடையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 லட்சம் மற்றும் 2 பவுன் நகை வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் அவர், அஞ்சலி தேவியிடம் பத்திரம் ஒன்றில் கையெழுத்து வாங்கி உள்ளார்.
கைது
இந்த நிலையில் சதீஷ், அவரிடம் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டி வருகிறார். இதுதொடர்பாக அவர்களிடையே ஏற்பட்ட தகராறில் அஞ்சலி தேவியை அவர் கத்தியால் குத்தியது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.