< Back
மாநில செய்திகள்
ஊர்க்காவல் படை வீரர் தூக்குப்போட்டு தற்கொலை: துக்கம் விசாரிக்க வந்த உறவினர் மின்சாரம் தாக்கி சாவு
சென்னை
மாநில செய்திகள்

ஊர்க்காவல் படை வீரர் தூக்குப்போட்டு தற்கொலை: துக்கம் விசாரிக்க வந்த உறவினர் மின்சாரம் தாக்கி சாவு

தினத்தந்தி
|
14 Dec 2022 10:35 AM IST

திருக்கழுக்குன்றம் அருகே ஊர்க்காவல் படை வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். துக்கம் விசாரிக்க வந்த உறவினர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.

திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலம் கிராமம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வசித்து வருபவர் ரவி. இவருடைய மகன் ராபின் (வயது 24). இவர், ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றி வந்தார்.

நேற்று முன்தினம் இரவு தனது பெற்றோருடன் ஒன்றாக சாப்பிட்டுவிட்டு பின்னர் இரவு தூங்க சென்றார். நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் ராபின் எழுந்து வரவில்லை. அவரது அறையின் கதவு திறக்கப்படாமல் இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் கதவை திறந்து பார்த்தபோது ராபின் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

ராபினுக்கு நீண்ட நாட்களாக வயிற்றுவலி இருந்ததாகவும், இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்தநிலையில் ராபின் தற்கொலை செய்து கொண்ட அறிந்த அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினர் ராமச்சந்திரன் (47), ராபினின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக வந்தார். அப்போது அங்கு இருந்த மின்விளக்கை எரிய செய்வதற்காக மின்இணைப்பு கொடுத்தார்.

இதில் அவர் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார். அதே பகுதியை சேர்ந்த ராஜா (45) என்பவரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அங்கு இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு திருக்கழுக்குன்றம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அவர்களை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் ராமச்சந்திரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ராஜா மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இதுபற்றியும் திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஊர்க்காவல் படை வீரர் தற்கொலை செய்த நிலையில் இதுபற்றி துக்கம் விசாரிக்க வந்த அவரது உறவினர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் துக்க வீட்டில் இருந்த அவர்களது உறவினர்களை மேலும் அதிர்ச்சியடைய செய்தது.

மேலும் செய்திகள்