சென்னை
அம்பத்தூரில் வீடு புகுந்து பயங்கரம்: ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை
|அம்பத்தூரில் வீடு புகுந்து ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தப்பி ஓடிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை அம்பத்தூர் சண்முகபுரம், நேதாஜி நகரை சேர்ந்தவர் மேக்ஸ்வெல் (வயது 50). ஆட்டோ டிரைவர். இவர், நேற்று மாலை தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல், வீடு புகுந்து மேக்ஸ்வெலை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். இதில் படுகாயம் அடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.
இது குறித்து தகவல் அறிந்துவந்த அம்பத்தூர் போலீசார், மேக்ஸ்வெலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மேக்ஸ்வெல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். கொலையான ஆட்டோ டிரைவர் மேக்ஸ்வெல்லுக்கு மோசஸ் மற்றும் லாரன்ஸ் என 2 மகன்கள் உள்ளனர். 2022-ம் ஆண்டு உதயகுமார் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மோசஸ், லாரன்ஸ் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
உதயகுமார் கொலைக்கு பழிக்குப்பழியாக மோசஸ் மற்றும் லாரன்சின் தந்தையான மேக்ஸ்வெல் கொலை செய்யப்பட்டிருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் தப்பி ஓடிய கொலையாளிகள் 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.