< Back
மாநில செய்திகள்
கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு புனிதநீர் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது
சேலம்
மாநில செய்திகள்

கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு புனிதநீர் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது

தினத்தந்தி
|
25 Oct 2023 1:11 AM IST

நாளை மறுநாள் கும்பாபிஷேகம் நடப்பதை முன்னிட்டு சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு புனித நீர் யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.

சேலம்:-

நாளை மறுநாள் கும்பாபிஷேகம் நடப்பதை முன்னிட்டு சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு புனித நீர் யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.

கோட்டை மாரியம்மன் கோவில்

சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக கடந்த 2-ந் தேதி கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. அன்று முதல் கும்பாபிஷேக பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

கடந்த 18-ந் தேதி மகாகணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து முளைப்பாரி போட்டு புதிய கொடி மரம் நடப்பட்டது. 19-ந் தேதி கணபதி வழிபாடு, கிராமசாந்தி அஷ்ட பலி பூஜைகள் நடந்தன. நேற்று காலை கணபதி வழிபாடு நடந்தது.

யானை மீது புனித நீர்

பின்னர் கிச்சிப்பாளையம் பேச்சியம்மன் கோவிலில் இருந்து புனித நீர் குடத்தில் எடுத்து யானை மீது கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. ஊர்வலத்தின் முன்பு குதிரை, பசுமாடு அழைத்து வரப்பட்டன. தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

கிச்சிப்பாளையத்தில் தொடங்கிய இந்த தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நாராயண நகர், கருவாட்டு பாலம், மகாத்மாகாந்தி சிலை, பழைய பஸ் நிலையம் வழியாக செண்டை மேளம் முழங்க கோட்டை மாாரியம்மன் கோவிலை அடைந்தது. ஊர்வலத்தில் பக்தர்கள் சிலர் சாமி வேடம் அணிந்து கலந்து கொண்டனர். பக்தர்கள் பலர் சாமியாடியபடியும், ஆட்டம், பாட்டத்துடனும் வந்தனர். இந்த ஊர்வலத்தை வழி நெடுகிலும் இருந்தவர்கள் பக்தி பரவசத்துடன் பார்வையிட்டனர்.

கலசம் பொருத்துதல்

இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு கணபதி வழிபாடு, சங்கல்பம், புண்யாகவஜனம், அக்னி சங்கரணம் ஆகியவை நடக்கிறது. மாலை 6 மணிக்கு முதல்கால வேள்வி தொடங்கி இரவு 10 மணி வரை நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை 2-ம் கால பூஜையும், ராஜகோபுரம், விமானங்களில் கலசம் பொருத்துதலும் நடக்கிறது.

பின்னர் மூலவர் மற்றும் பரிவார சாமிகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடக்கிறது. மாலை 6 மணிக்கு 3-ம் கால பூஜையும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு 4-ம் கால பூஜையும் நடக்கிறது. பின்னர் ராஜகோபுரம், கருவறை, விமானம், பரிவார சன்னதி விமானம், கொடி மரத்திற்கு திருக்குடமுழுக்கு நடக்கிறது.

கும்பாபிஷேகம்

காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் கோட்டை மாரியம்மன், மதுரை வீரன் சாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 10 மணிக்கு மேல் மூலவருக்கு மகா அபிஷேகம், ராஜ அலங்காரம், மகாதீபாராதனை நடக்கிறது.

தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை தங்கரதம் புறப்பாடு நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல், செயல் அலுவலர் அமுதசுரபி மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.

வாஸ்து சாந்தி யாகம்

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோட்டை மாரியம்மன் கோவிலில் நேற்று இரவு கோவிலை தூய்மைப்படுத்தும் விதமாக வாஸ்துசாந்தி யாகம் நடைபெற்றது. இதில் அறங்காவலர் குழு தலைவர் எஸ்டி.என்.சக்திவேல் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்