தஞ்சாவூர்
புனித வியாகுல அன்னை ஆலய தேர்பவனி
|புனித வியாகுல அன்னை ஆலய தேர்பவனி
தஞ்சையில் உள்ள புனித வியாகுல அன்னை ஆலய தேர்பவனி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புனித வியாகுல அன்னை ஆலயம்
தஞ்சை பூக்காரத்தெருவில் உள்ள புனித வியாகுல அன்னை ஆலயம் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த ஆலயத்துக்கு ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பிற மதங்களை சேர்ந்த பெண்கள் திருமணம் நடைபெற வேண்டியும், சுக பிரசவம் நடைபெற வேண்டியும் வந்து வழிபடுவது வழக்கம். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு கடந்த 15-ந் தேதி வியாகுல அன்னையின் திருக்கொடி ஏற்றி வைக்கப்பட்டு நவநாள் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வியாகுல அன்னையின் தேர்பவனி நடைபெற்றது.
தேர்பவனி
முன்னதாக குடந்தை மறை மாவட்டத்தை சேர்ந்த அந்துவான் அடிகளார் தலைமையில் கூட்டுப் பாடல் திருப்பலி நடைபெற்றது. இதில் பேராலய பங்குத்தந்தை பிரபாகர் அடிகளார், உதவி பங்கு தந்தை பிரவீன் அடிகளார் உள்பட குருக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து தேர் பவனி நடைபெற்றது. முதலில் மிக்கேல் சம்மனசு தேரும், அதனைத் தொடர்ந்து புனித சவேரியார், புனித சூசையப்பர், புனித அந்தோணியார் சுரூபங்களை தாங்கிய தேரும் இறுதியாக வியாகுல அன்னை தேரும் பவனியாக சென்றது. இதில் ஏராளமான இறை மக்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஜெபித்துக் கொண்டும், பாடிக்கொண்டும் வந்தனர். முடிவில் பேராலய மக்கள் மன்றத்தில் அன்பு விருந்து வழங்கப்பட்டது.
கொடியிறக்கம்
வியாகுல அன்னை திருவிழாவின் நிறைவு நாளான நேற்று வியாகுல அன்னை ஆலயத்தில் குடந்தை ஆயர் அந்தோணிசாமி தலைமையில் கூட்டுப் பாடல் திருப்பலி நடைபெற்றது. இதில் மறை மாவட்ட வேந்தர் ஜான் சக்கரியாஸ் கலந்து கொண்டார். முடிவில் பேராலய பங்குத்தந்தை பிரபாகர் அன்னையின் திருக்கொடியை இறக்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பங்கு பேரவை துணைத்தலைவர் வின்செண்ட், செயலர் குழந்தைராஜ், அன்பிய பொறுப்பாளர்கள், இளைஞர் மன்றத்தினர், பக்த சபைகள் சேர்ந்தவர்கள் செய்திருந்தனர்.