அதிகனமழை பெய்தால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
|விடுமுறை குறித்த முடிவை பள்ளி துவங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பே எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை,
பள்ளிகளுக்கு மழைக்கால விடுமுறை அளிப்பதில் 7 வகையான விதிமுறைகள பின்பற்ற அறிவுறுத்தி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அதிகனமழை பெய்தால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லேசான மழையோ, தூரலோ இருந்தால் விடுமுறை அறிவிக்கக் கூடாது எனவும், விடுமுறை குறித்த முடிவை பள்ளி துவங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பே எடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதுமான மழை நிலவரம், பாதிப்புகள் குறித்து முதன்மை கல்வி அலுவலர்கள் மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்க வேண்டும் எனவும், மாவட்டம் முழுவதும் விடுமுறை அறிவிக்கக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் நாட்களை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமை போன்ற நாட்களில் வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விடுமுறை காரணமாக எந்த பாடங்களும் விடுபடாமல் முழுமையாக நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் மழைநீர் தேங்கி இருந்தால், அவற்றை அப்புறப்படுத்தி, மாணவர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து பள்ளிகள் செயல்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.