< Back
மாநில செய்திகள்
சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை விடுமுறை - தமிழக அரசு உத்தரவு
மாநில செய்திகள்

சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை விடுமுறை - தமிழக அரசு உத்தரவு

தினத்தந்தி
|
16 Aug 2022 8:45 PM IST

போலீசாருக்கு வார விடுமுறை வழங்கப்படுவதைப்போல், சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை விடுமுறை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் கே.பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது,

தமிழக சட்டசபையில் கடந்த மே மாதம் 10-ந்தேதி காவல் துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசும்போது, போலீசாருக்கு வார விடுமுறை அளிக்கும் நடைமுறை பின்பற்றப்படுவதை தொடர்ந்து, தற்போது 15 நாட்களுக்கு ஒரு முறை சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு ஒரு நாள் விடுப்பு வழங்கப்படும் என்றும், இதன் மூலம் 10 ஆயிரத்து 508 பேர் பயனடைவார்கள் என்றும் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, போலீசாருக்கு வார விடுமுறை முறையாக வழங்கப்பட்டு வருவதைப்போல, அதே பலன்கள் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கும், சப்-இன்ஸ்பெக்டர்களுக்கும் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

அதன்படி, 15 நாட்களுக்கு ஒரு முறை சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்று அவர் பரிந்துரை செய்திருந்தார்.

அரசு இதை விரிவாக ஆராய்ந்து போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கொடுத்த, முன்மொழிவினை ஏற்றுக்கொண்டு, சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை விடுமுறை வழங்க ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இதற்கு தேவையான திருத்தங்கள் அளிப்பதற்கு, போலீஸ் நிலை ஆணை தனியாக வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்