< Back
மாநில செய்திகள்
விடுமுறை எதிரொலி; குமரியில் குவியும் சுற்றுலா பயணிகள்  - விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்ல 2 கிலோ மீட்டர்  தூரம் வரிசையில் காத்திருப்பு...!
மாநில செய்திகள்

விடுமுறை எதிரொலி; குமரியில் குவியும் சுற்றுலா பயணிகள் - விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்ல 2 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் காத்திருப்பு...!

தினத்தந்தி
|
24 Dec 2022 10:19 AM IST

விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்ல 2 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் காத்திருந்து சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர்.

கன்னியாகுமரி,

இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இது ஒரு உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படை எடுத்துச் சென்ற வண்ணமாக உள்ளனர்.

அந்த அடிப்படையில் கன்னியாகுமரியில் சனி,ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில், பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் மேலும் அதிகரித்தது.

இந்த விடுமுறை காரணமாக கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், சங்கிலி துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

கன்னியாகுமரி கடலில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன்பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர்.

இந்நிலையில், சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் விவேகானந்தர் மண்டபத்திற்கு படகில் செல்ல நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். விவேகானந்தர் மண்டபத்திற்கு படகில் செல்ல சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் மக்கள் காத்திருந்தனர்.

சபரிமலை சீசன், அரையாண்டு விடுமுறை, பண்டிகை உள்ளிட்ட காரணங்களால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்