ஈரோடு
ஹோலி பண்டிகை கொண்டாடிய வடமாநிலத்தினர்
|ஈரோட்டில் வடமாநிலத்தவர்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ண பொடியை பூசி ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள்.
ஈரோட்டில் வடமாநிலத்தவர்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ண பொடியை பூசி ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள்.
ஹோலி பண்டிகை
ஈரோட்டில் ஜவுளி, எலக்ட்ரிக்கல் பொருட்கள், உணவு வகைகள் விற்பனை செய்யும் கடைகளை வடமாநிலத்தவர்கள் அதிகமாக வைத்து நடத்தி வருகிறார்கள். குறிப்பாக இந்திரா நகர் பகுதியில் பெரும்பாலான வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். மேலும், என்.எம்.எஸ்.காம்பவுண்ட், பி.பி.அக்ரஹாரம் ஆகிய பகுதிகளிலும் அவர்கள் வசிக்கிறார்கள். வடமாநிலங்களில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகையை ஈரோட்டிலும் வடமாநிலத்தவர்கள் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடி மகிழ்வது வழக்கம். இதற்காக ஆங்காங்கே பந்தல் அமைத்து உறவினர்கள், நண்பர்களுக்கு விருந்து கொடுத்து, ஆடல், பாடல் என உற்சாகமாக கொண்டாடி மகிழ்வார்கள்.
இந்தநிலையில் வடமாநிலங்களில் குளிர்காலத்தை வழிஅனுப்பி வைக்கும் இளவேனிற்கால பண்டிகையான ஹோலியை இன்று (புதன்கிழமை) கொண்டாடுகிறார்கள். இதையொட்டி ஈரோட்டில் நேற்றில் இருந்தே ஹோலி பண்டிகையை வரவேற்கும் விதமாக வடமாநிலத்தவர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள்.
வண்ண பொடிகள்
ஈரோடு இந்திராநகரில் ஹோலி பண்டிகைக்கான ஏற்பாடுகள் நேற்று முன்தினம் நள்ளிரவிலேயே செய்யப்பட்டன. அங்கு வடமாநிலத்தவர்கள் ஒன்றாக இணைந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறி கொண்டார்கள். மேலும், வண்ண பொடிகளை நண்பர்கள், உறவினர்களின் முகத்தில் பூசி மகிழ்ந்தார்கள். இதேபோல் சிறுவர்-சிறுமிகள், இளைஞர்கள்-இளம்பெண்கள் உள்ளிட்டோரும் வண்ண கொடிகளை தண்ணீரில் கரைத்து ஒருவர் மீது ஒருவர் ஊற்றினார்கள். உற்சாக மிகுதியில் பலூன்களில் வண்ண தண்ணீரை ஊற்றி வீசி அடித்தனர்.
டிரம்ஸ் அடித்தும், பாடல் பாடியும் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்கள். இன்றும் (புதன்கிழமை) ஈரோட்டில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.