தர்மபுரி
ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் அடித்து சென்றவரை மீட்ட வாலிபர்கள்
|பென்னாகரம்:
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல் சவாரி செய்வதற்கும் தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று விடுமுறை நாளையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அதன்படி சென்னை கே.கே.நகர் பகுதியை சேர்ந்த ரகு என்பவர் தனது நண்பர்களுடன் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தார்.
அங்கு பல்வேறு இடங்ளை சுற்றிபார்த்த அவர்கள் அங்குள்ள அருவியில் குளித்தனர். அப்போது ரகு எதிர்பாராதவிதமாக பாறையில் வழுக்கி விழுந்து ஆற்றில் அடித்துசெல்லப்பட்டார்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக ரகுவுக்கு நீச்சல் தெரிந்ததால் அவர் சிறிது தூரம் நீந்தி சென்று தொங்கு பாலத்திற்கு அடியில் பாறைகளை பிடித்தவாறு சத்தம் போட்டார். இதை கண்ட சுற்றுலா பயணிகள் கூச்சலிட்டனர். இதுகுறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
எனினும் அவர்கள் வர தாமதமானதால் அங்கிருந்த வாலிபர்கள் பெரும்பாலை பகுதியை சேர்ந்த சரவணன், ராஜசேகரன், அரவிந்த்குமார் ஆகியோர் ஆற்றில் குதித்து பாறையை பிடித்து கொண்டிருந்த ரகுவை பத்திரமாக மீட்டனர். இதையடுத்து வாலிபர்கள் 3 பேரையும் சுற்றுலா பயணிகள்பாராட்டினர்.