தர்மபுரி
ஒகேனக்கல் காவிரி ஆற்றின் உபரிநீரைதர்மபுரி மாவட்ட ஏரிகளில் நிரப்பும் வரை போராடுவோம்டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேச்சு
|ஒகேனக்கல் காவிரி ஆற்றின் உபரிநீரை தர்மபுரி மாவட்ட ஏரிகளில் நிரப்பும் வரை போராடுவோம் என தர்மபுரியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.
முக்கிய பங்கு
தர்மபுரியில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. இல்ல திருமண விழா நேற்று நடைபெற்றது. இந்த திருமண விழாவை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். விழாவில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள மொத்த வாக்காளர்களில் 45 சதவீதத்தினர் மட்டுமே அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள். மீதமுள்ள 55 சதவீதத்தினர் எந்த அரசியல் கட்சியையும் சேராதவர்கள். இவர்களுடைய வாக்குகள்தான் ஆட்சியை நிர்ணயம் செய்கின்றன. எனவே இந்த வாக்குகளை பெற நாம் முனைப்புடன் செயல்பட வேண்டும்.
தமிழகத்தில் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு பா.ம.க. முக்கிய பங்கு வகித்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் நிலத்தடி நீரில் புளோரைடு பாதிப்பிற்கு தீர்வு காண ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று 25 ஆண்டு காலமாக போராடினோம். அதன் விளைவாக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டது. பா.ம.க. போராட்டம் நடத்தாமல் இருந்திருந்தால் இந்த திட்டம் கிடைத்திருக்காது.
காவிரி உபரிநீர் திட்டம்
வெள்ளப்பெருக்கு காலங்களில் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் உபரிநீரில் 3 டி.எம்.சி. நீரை தர்மபுரி மாவட்ட ஏரி, குளங்களில் நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறோம். இந்த திட்டம் பரிசீலனையில் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த திருமண வரவேற்பு விழாவில் தமிழக முதல்-அமைச்சர் பங்கேற்றார். ஜி.கே.மணி நினைத்தால் இந்த திட்டம் கிடைத்து விடும். இங்கு வந்த முதல்-அமைச்சரிடம் காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அறிவிக்குமாறு கூறியிருக்கலாம்.
இது மக்கள் பிரச்சினை. இந்த திட்டத்தை நிறைவேற்றும் வரை போராடுவோம். தர்மபுரி- மொரப்பூர் ெரயில் பாதை இணைப்பு திட்டத்திற்கு தற்போது ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிப்காட் தொழிற்பேட்டை, பல்வேறு நீர்ப்பாசன திட்டங்கள் பா.ம.க நடத்திய தொடர் போராட்டத்தால் கிடைத்தவை.
சமூகநீதி
தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட 2 பெரிய சமூகங்கள் உள்ளன. ஒன்று தாழ்த்தப்பட்ட சமூகம். மற்றொன்று வன்னியர் சமூகம். இந்த 2 சமூகங்களின் மக்கள் தொகை தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதம் ஆகும். இந்த 2 சமூகங்கள் முன்னேற்றம் அடைந்தால் ஒட்டுமொத்த தமிழகமும் முன்னேற்றம் அடைந்து விடும்.
வன்னியர் சமூகத்திற்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு சாதி பிரச்சினை அல்ல. அது சமூக நீதிக்கானது. நிச்சயமாக உள் ஒதுக்கீடு கிடைக்கும். மக்களுக்கான வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற ஆட்சியில் இருப்பவர்களிடம் கோரிக்கை வைக்கும் நிலை மாறும். நாமே மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றும் காலம் நிச்சயமாக வரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.