தர்மபுரி
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு2 ஆயிரம் கனஅடியாக குறைந்ததுதண்ணீரின்றி பாறைகளாக காட்சியளிக்கும் ஐந்தருவி
|ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதனால் ஐந்தருவி, காவிரி ஆறு தண்ணீரின்றி பாறைகளாக காட்சியளிக்கிறது.
பென்னாகரம்:
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதனால் ஐந்தருவி, காவிரி ஆறு தண்ணீரின்றி பாறைகளாக காட்சியளிக்கிறது.
அணைகள் நிரம்பவில்லை
கர்நாடகா, தமிழகம் இடையே காவிரி நீரை பங்கீட்டு கொள்வதில் நீண்டகாலமாக பிரச்சினை இருந்து வருகிறது. குறிப்பாக வறட்சி காலத்தில் காவிரி நீரை பங்கீட்டு கொள்வதில் தான் அதிக சிக்கல்கள் நிலவி வருகிறது. இந்த நிலையில் நடப்பாண்டில் கர்நாடக மாநிலத்தில் போதிய மழை பெய்யாததால் காவிரி படுகையில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், ஹாரங்கி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகள் நிரம்பவில்லை. கபினி அணை மட்டுமே நிரம்பியது.
இதற்கிடையே காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் காவிரியில் இருந்து தமிழத்துக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
நீர்வரத்து குறைந்தது
எனினும் கர்நாடக அரசு அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை வினாடிக்கு 2 ஆயிரத்து 489 கனஅடியாக குறைத்தது. இதன் காரணமாக நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
இந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. தண்ணீர் வரத்து பெருமளவில் குறைந்ததால் ஐந்தருவி, காவிரி ஆறு உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீரின்றி பாறைகளாக காட்சியளிக்கிறது.