< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்

நீர்வரத்து குறைந்ததால் பாறைகளாக காட்சி அளிக்கும் ஒகேனக்கல் காவிரி ஆறு கூட்டு குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல்

தினத்தந்தி
|
6 July 2023 12:30 AM IST

பென்னாகரம்:

நீர்வரத்து குறைந்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆறு பாறைகளாக காட்சி அளிக்கிறது. மேலும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வினியோகம் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஒகேனக்கல்

கர்நாடக மாநிலம் குடகுமலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு தமிழக எல்லையான தர்மபுரி மாவட்டம் பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வருகிறது. மேலும் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்போது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு வெள்ளமாக ஓடும்.

அப்போது அங்குள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இதற்கிடையே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் தொங்கு பாலம், நடைபாதை, பார்வை கோபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று காவிரி ஆற்றின் இயற்கை அழகை கண்டு ரசிப்பார்கள்.

நீர்வரத்து குறைந்தது

பின்னர் அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, காவிரி ஆற்றில் குளிப்பதோடு, குடும்பத்தினர், நண்பர்களுடன் பரிசலில் சென்று மகிழ்வர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது.

இதனால் தற்போது ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 300 கனஅடிக்கும் குறைவாகவே தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. நீர்வரத்து குறைந்துள்ளதால் கரைபுரண்டு ஓடிய ஒகேனக்கல் காவிரி ஆறு தற்போது வெறும் பாறைகளாக காட்சி அளிக்கிறது.

ஆர்ப்பரித்து கொட்டிய ஐந்தருவி, மெயின் அருவி களையிழந்து வறண்டு காணப்படுகிறது. காவிரி ஆற்று பகுதியில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி குட்டைபோல் காட்சி அளிக்கிறது.

குடிநீர் வினியோகத்தில் சிக்கல்

இது ஒருபுறம் இருக்க ஒகேனக்கல்லில் நீர்வரத்து குறைந்துள்ளதால் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகம் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனினும் காவிரி ஆற்றில் ஆங்காங்கே மணல் மூட்டைகளை அடுக்கி தண்ணீரை தேக்கி அங்கிருந்து கூட்டு குடிநீர் திட்ட நிலையத்திற்கு கொண்டு சென்று சமாளித்து வருகின்றனர்.

இந்த நிலை தொடர்ந்தால் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆனால் இந்தாண்டு நீர்வரத்து குறைந்து காவிரி ஆற்றில் தண்ணீரின்றி பாறைகளாக காட்சி அளித்து வருகிறது.

மேலும் செய்திகள்