ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
|ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி,
கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. இந்த நிலையில் மீண்டும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்தது.
இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கடந்த 2 தினங்களுக்கு முன் வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதன் காரணமாக ஒகேனக்கல் அருவிகள் மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
இந்த நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 8,000 கன அடியாக குறைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இன்று விடுமுறை நாள் என்பதால் ஒகேனக்கல்லுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.