தேனி
வீட்டில் பதுக்கிய52 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
|கூடலூர் அருகே வீட்டில் பதுக்கிய 52 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கூடலூர் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி பீ.வீ.கே தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 55). இவரது தம்பி குணசேகரன் என்ற வெள்ளை குணா (42). இவர்கள் இருவரும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மொத்தமாக விலைக்கு வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கூடலூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் அவர்களை கண்காணித்து வந்தனர்,
இந்நிலையில் நேற்று போலீசார் திடீரென ஈஸ்வரனின் வீட்டிற்குள் நுழைந்தனர். அப்போது போலீசார் வருவதை கண்டதும் ஈஸ்வரன் அங்கிருந்து தப்பி ஓடினார். குணசேகரன் மட்டும் போலீசில் சிக்கினார். பின்னர் போலீசார் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது 4 பிளாஸ்டிக் பைகளில் 52 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு ரூ.94 ஆயிரத்து 578 ஆகும். இதையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து போலீசார் குணசேகரனை கைது செய்தனர். தப்பி ஓடிய ஈஸ்வரனை தேடி வருகின்றனர்.