நீட் தேர்வு ஒழிய காரணமாக இருந்தவர் உதயநிதி என்ற வரலாறு உருவாகும் - அமைச்சர் துரைமுருகன் பேச்சு
|நீட் தேர்வுக்கு எதிராக திமுக நீண்ட சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறது என்று அமைச்சர் துரை முருகன் கூறினார்.
சென்னை,
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா தற்போது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வருகின்றார்.
இந்த நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி திமுக சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னையில் வள்ளுவா் கோட்டம் அருகே நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சா்கள் உதயநிதி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, சென்னையைச் சோந்த எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றுள்ளனர். இந்தப் போராட்டத்தை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தில், மாணவ - மாணவிகள், அவா்களின் பெற்றோா்கள், கல்வியாளா்கள், சமூகச் செயற்பாட்டாளா்கள் உட்பட பலா் கலந்து கொள்ளவுள்ளனா்.
போராட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-
நீட் தேர்வுக்கு எதிராக திமுக நீண்ட சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு நீட் தேர்வை கல்வியாளர்கள் பலர் எதிர்க்கின்றனர். ஆனால் பிரதமர் மோடி அரசு அதனை கண்டுகொள்ளாமல் உள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவில் நாம் மட்டும்தான் நீட் தேர்வை எதிர்த்து வருகிறோம்; ஏனென்றால், இது எதிர்காலத்தை சீரழிக்கும் என்ற வருங்கால சிந்தனை நமக்கு உண்டு.
நீட் தேர்வை ஒழிக்கும் வரை ஓயமாட்டேன் என சபதம் எடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உண்ணாவிரதம். நீட் தேர்வுக்கு எதிராக தொடர் போராட்டத்தை அமைச்சர் அறிவிப்பார். நீட் தேர்வு ஒழிய காரணமாக இருந்தவர் உதயநிதி என்ற வரலாறு உருவாகும். நீட் தேர்வினால் பலர் விடும் சாபம் மத்திய ஆட்சியை ஒழித்துவிடும் என்று கூறினார்.