புதுக்கோட்டை
திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தல வரலாறு
|திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தல வரலாற்றை காண்போம்:-
மாரியம்மனுக்கு எல்லாம் முதன்மை மாரியாக விளங்கி வரும் திருவப்பூர் முத்துமாரியம்மன் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் புதைந்து கிடந்து பூசாரி ஒருவரின் அருள்வாக்கின் மூலம் வெளிப்பட்டார். அருள்வாக்கின்படி அம்மனின் திருவுருவை பூமியில் இருந்து தோண்டி எடுத்து பச்சை கூடாரத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். அந்த சமயத்தில் புதுக்கோட்டை மாவட்டம் மன்னருக்கு சொந்தமானதாக இருந்ததால் சமஸ்தானம் பெரும் புகழோடு விளங்கியது. பொருளாதார செலவாணிக்காக அம்மன் காசு அடித்து தனியாக நிர்வாகம் செய்த திறமையும், அந்தஸ்தும் புதுக்கோட்டைக்கே உரியதாக இருந்தது. புதுக்கோட்டையை அப்போது ஆண்டு வந்த மன்னரின் மகனுக்கு கடுமையான அம்மை நோய் கண்டு உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டது. முத்துமாரியம்மன் கோவில் வந்து தனது மகனை காப்பாற்றி தருமாறு மன்னர் மன்றாடினார். ஆனால் விதிப்பயன் காரணமாக மன்னரின் மகன் மரணமடைந்தான். மன்னர் ஆத்திரத்திலும், அதிர்ச்சியிலும் தன் நிலை மறந்தார். அந்த இடத்தில் இருந்து அம்மனை வேறு இடம் மாற்ற உத்தரவிட்டார். அரசின் ஆணைப்படி அம்மன் சிலையை வேறு இடம் கொண்டு செல்கையில் திருவப்பூர் கிராமத்தினர் வழிமறித்து கெஞ்சி அம்பாளை மீட்டு பாதுகாப்பான இடத்தில் வைத்தனர். அந்த இடம் தற்போது காட்டுமாரியம்மன் கோவில் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது. அன்று இரவு மன்னரின் கனவில் முத்துமாரியம்மன் தோன்றி உனது மகன் விதி வசத்தால் உன்னை விட்டு பிரிந்தாலும் அவனை எனது மகனாக ஏற்றுக்கொண்டேன் எனக்கூறினார். தவறை உணர்ந்த மன்னர் அம்மனை முன்பு இருந்த இடத்திலேயே அதாவது தற்போது கோவில் அமைந்துள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்யுமாறு உத்தரவிட்டார். அன்றில் இருந்து மக்கள் தொன்று தொட்டு வழிபட்டு வருகின்றனர். இக்கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் மாசித்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். மாசித்திருவிழாவுக்கு முன்பாக பூச்சொரிதல் விழா நடைபெறும். அதன்படி கடந்த மாதம் 26-ந் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இந்த மாசி திருவிழா வருகிற 21-ந் தேதியுடன் நிறைவடைகிறது.