இந்துக்கள் நலனில் அக்கறை தேவை: இந்து முன்னணி கோரிக்கை
|சென்னை, தலைமைச் செயலகத்தில் சிறுபான்மையினர் நலன் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
சென்னை,
இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை, தலைமைச் செயலகத்தில் சிறுபான்மையினர் நலன் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், முதல்-அமைச்சர், கிறிஸ்தவ தேவாலய தலைவர்கள் மற்றும் இஸ்லாமிய மதபோதகர்களுடனும் தனியாக ஆலோசனை நடத்தி சிறுபான்மையினருக்காக பல நலத்திட்டங்களையும், அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்புகள் மூலம் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் யார் சிறுபான்மையினருக்கு உதவி செய்வதில் சிறந்தவர், அவர்களின் வாக்கு வங்கியை யாருக்கு சாதகமாக்குவது என்ற போட்டி தான் நடக்கிறது. சிறுபான்மையினரின் பாதுகாவலர்களாக தங்களை காண்பித்துக் கொள்கின்றனர். கல்வி நிறுவனங்கள் வழிபாட்டுத்தலங்கள், கல்லறை தோட்டங்கள், கபர்ஸ்தானங்கள் என சிறுபான்மையினருக்காக தங்களது மூளையையும், பணத்தையும் செலவிடும் தமிழ்நாடு அரசு பெரும்பான்மை இந்து சமுதாயத்தைப் பற்றியும் கொஞ்சம் கவலைப்பட வேண்டும்.
மதசார்பற்ற அரசியல் செய்வதாகக் கூறிக் கொள்பவர்கள் இந்துக்களின் சுடுகாடுகள் பராமரிப்பின்றி கிடக்கின்றன என்பது பற்றி சிறிதும் கவலைப்படவில்லை. பல சுடுகாடுகளில் அடிப்படை வசதிகளே இல்லை. சென்னை மற்றும் பிற முக்கிய மாவட்டங்களில் இந்துக்களின் சடலங்களை எரிப்பதோடு சரி. புதைப்பதற்கு அரசாங்க நிர்வாகம் அனுமதிப்பதில்லை. தமிழக அரசு பெரும்பான்மை இந்துக்களின் பல பிரச்சினைகளை கண்டு கொள்வதே இல்லை. ஆனால் இனி உங்களின் வாக்கு வங்கி அரசியல் எடுபடாது. தூங்கிய இந்துக்கள் விழித்து விட்டார்கள். ஒட்டுமொத்த இந்து சமுதாயமும் கேள்வி கேட்கும் காலம் வந்துவிட்டது. இனியாவது தி.மு.க. அ.தி.மு.க. போன்ற கட்சிகள் இந்துக்களின் நலனில் அக்கறையோடு செயல்பட வேண்டும்' என்று கூறி உள்ளார்.