தேனி
இந்து எழுச்சி முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
|தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இந்து எழுச்சி முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இந்து எழுச்சி முன்னணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரியகுளத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்பழகனிடம் அவர்கள் ஒரு மனு கொடுத்தனர். அதில், சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகம் குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு சாலையோரம் பாதுகாப்பற்ற சூழலில் நிறுத்தி வைத்து நிகழ்ச்சி நடத்தியதாகவும், மதமாற்றம் செய்ய முயற்சி செய்ததாகவும் கூறியிருந்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.