செங்கல்பட்டு
கிழக்கு கடற்கரை சாலையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான சவுக்கு தோப்பில் 10 கி.மீ. தூர சுற்றுச்சுவர் கட்டும் பணி தீவிரம்
|கிழக்கு கடற்கரை சாலையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான சவுக்கு தோப்பு பகுதியில் 10 கி.மீ. தூர சுற்றுச்சுவர் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அறக்கட்டளை நிலம் ஆக்கிரமிப்பு
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் ஆளவந்தார் அறக்கட்டளை இயங்குகிறது. நெம்மேலியை சேர்ந்த வைணவ பக்தர் ஆளவந்தார் நாயக்கர் என்பவர் 1.144 ஏக்கர் நிலத்தை, வைணவ கோவில்களில் திருவிழாக்கள் நடத்த கடந்த 1914-ம் ஆண்டில் உயில் சாசனம் பதிந்துவிட்டு மறைந்தார். உறவினர்கள் சொத்தை விற்க முயன்றதால் செங்கல்பட்டு கோர்ட்டு 1943-ம் ஆண்டு அறநிலையத்துறையிடம் ஒப்படைத்தது.
தற்போது, ஆளவந்தார் அறக்கட்டளை மூலம் இந்து சமய அறநிலையத்துறை நிர்வகித்து வருகிறது. சாலவான்குப்பம், பட்டிபுலம், நெம்மேலி உள்ளிட்ட பகுதிகளில் 1,054 ஏக்கர் கடலோர நிலம் உள்ளது. சொத்து வருவாயில் மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவில், திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோவில், திருப்பதி வெங்கடேச பெருமாள் போன்ற கோவில்களில் திருவிழாக்கள் நடத்தி அன்னதானம் வழங்கப்படுகிறது.
ஆளவந்தாருக்கு ஆண்டுதோறும் குருபூஜை நடத்தப்படுகிறது. கடல் நீரில் குடிநீர் உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கு நீண்டகால குத்தகை ஒப்பந்தத்தில் 128 ஏக்கர் நிலம் அளிக்கப்பட்டுள்ளது. பட்டிபுலம் உள்ளிட்ட பகுதிகளில் தனியார் அணுகுபாதைக்காக அறக்கட்டளை நிலத்தை சிலர் ஆக்கிரமித்தனர்.
ரூ.150 கோடி நிலம் மீட்பு
இந்த நிலையில் தனியார் ஆக்கிரமித்துள்ள அறக்கட்டளை நிலத்தை மீட்க கோரி வக்கீல் ஒருவர் கடந்த 2020-ம் ஆண்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து நிலத்தை அளவிட்டு அத்துறை சட்டப்பிரிவு 78-ன் கீழ், கடந்த ஆண்டு, ரூ.150 கோடி மதிப்புள்ள 40 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. சவுக்கு தோப்புடன் கூடிய அறக்கட்டளை நிலம் 10 கி.மீ. நீளத்திற்கு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது.
பணி தீவிரம்
ஆக்கிரமிப்பை தவிர்த்து சவுக்கு தோப்பு நிலத்தை பாதுகாக்க இந்த நிலப்பகுதிக்கு ரூ.10 கோடி மதிப்பில் சுற்றுச்சுவர் அமைக்க தமிழக அரசு அறநிலையத்துறைக்கு அனுமதி வழங்கியது. அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் 17-ந்தேதி காணொலி காட்சி வாயிலாக பணியை தொடங்கி வைத்தார். இதைத்தொடந்து ஓப்பந்ததாரர்கள் மூலம் அடித்தள கட்டுமான பணிகள் கட்டும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சுவர் நிலத்தடியில் 2 அடி ஆழ அடித்தளம், அதன்மேல் 3 அடி உயர கருங்கல் சுவர் அதற்கும் மேல் 3 அடி உயர கிரில் கம்பி தடுப்பு என இந்த சுற்றுச்சுவர் தடுப்பு அமைய உள்ளது. இந்த சுற்றுச்சுவர் அமைக்கப்படுவதால் இங்குள்ள சவுக்கு தோப்பு பகுதிகளில் நடைபெறும் குற்ற சம்பவங்கள் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.