இந்து சமய அறநிலையத்துறை மிகச் சிறப்பாக செயல்படுகிறது - தருமபுரம் ஆதீனம் கருத்து
|தற்போதைய சூழலில் ஆதீனங்கள் அரசியல் பேசாமல் ஒதுங்கி இருப்பதே நல்லது என்று தருமபுரம் ஆதீனம் கருத்து தெரிவித்தார்.
திருவாரூர்:
திருவாரூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான கோவில் திருப்பணிகள், மடத்திற்கு சொந்தமான இடங்களை தருமபுரம் ஆதீனம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் ஆய்வு வந்திருந்தார். அப்போது அவர் நிருபர்களுக்குக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஆதீனங்கள் அரசியல் பேசக்கூடாது என்று கூறுவது குறித்த கேள்விக்கு ஆன்மீகமும் அரசியலும் கலந்து தான் அந்த காலத்தில் இருந்திருக்கிறது. இருப்பினும் தற்போதைய சூழலில் ஆதீனங்கள் அரசியல் பேசாமல் ஒதுங்கி இருப்பதே நல்லது என்றும் தெரிவித்தார்.
மேலும் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை மிகச் சிறப்பாக செயல்படுகிறது அவர்களின் முழு ஒத்துழைப்பின் காரணமாகத்தான் நாங்கள் பல இடங்களில் விரைந்து குடமுழுக்கு மற்றும் கோவிலுக்கு சொந்தமான இடங்களை மீட்பது போன்ற பணிகளை செய்ய முடிகிறது என்றும் தெரிவித்தார்.
சைவ சித்தாந்தங்களை வளர்ப்பதற்கு தனி பாடப்பிரிவு வைத்திருக்கிறோம். மாலை நேர கல்லூரி நடத்துகிறோம். அதன் மூலம் மயிலாடுதுறை, சிதம்பரம், சென்னை, திருச்சி, திருவாரூர் உள்ளிட்ட 15 இடங்களில் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இரண்டு ஆண்டு முடிந்த பிறகு தேர்வுகள் வைத்து சான்றிதழ் கொடுக்கின்றோம்.
இது குறித்த மாநாடுகளும் அடிக்கடி நடத்தி வருகிறோம். எங்கள் கல்லூரியிலும் இதை பாடத்திட்டமாக கொண்டு வந்திருக்கிறோம். பாடத்திட்டத்திலேயே பி.ஏ. சைவ சித்தாந்தம் என்கிற பாடப்பிரிவை கொண்டு வந்திருக்கிறோம். இதுவரை நாங்கள் ஐந்து மாநாடுகள் நடத்தி இருக்கிறோம். மதுரை, வாரணாசி, சென்னை, மலேசியா போன்ற இடங்களில் இந்த மாநாட்டினை நடத்தி இருக்கிறோம்..
தற்போது ஆங்கில வழியிலும் யூ டியூப் மூலம் சைவ சித்தாந்த வகுப்புகளை புதன்கிழமை தோறும் நடத்திக் கொண்டிருக்கிறோம். இதில் 20 நாடுகளைச் சேர்ந்த 200-க்கு மேற்பட்டவர்கள் அதில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்