கிருஷ்ணகிரி
கோவில்கள் அருகில் உள்ள இறைச்சி கடைகளை அகற்றாவிட்டால் இந்து முன்னணி சார்பில் போராட்டம் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் பேட்டி
|கோவில்கள் அருகில் உள்ள இறைச்சி கடைகளை அகற்றாவிட்டால் இந்து முன்னணி சார்பில் போராட்டம் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் பேட்டி
கோவில்கள் அருகில் உள்ள இறைச்சி கடைகளை அகற்றாவிட்டால் இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்கூறினார்.
பிரசாரம்
தமிழகம் முழுவதும் இந்து உரிமை மீட்பு பிரசாரம் மேற்கொண்டுள்ள இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், நேற்று கிருஷ்ணகிரியில் நிருபர்களுக்கு பேட்டிஅளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கிருஷ்ணகிரியில் உள்ள சந்திர மவுலீஸ்வரர் கோவிலை போல், பல்வேறு கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெறாமல் உள்ளது. தேன்கனிக்கோட்டை பேட்ராய சாமி கோவிலுக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது. அறநிலையத்துறை அமைச்சர் கோவில் நிலங்களை மீட்பதாக பொய்யான தகவலை சொல்லி கொண்டிருக்கிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எங்கெல்லாம் ஆக்கிரமிப்பு உள்ளது என்று நாங்களே காட்டுகிறோம். அவற்றை அறநிலையத்துறை அமைச்சர் ஆய்வு செய்ய வேண்டும். அதே போல் குத்தகை பணம் வராமல் உள்ள கோவில் விவரங்களையும் நாங்களே தருகிறோம். அவற்றையும் ஆய்வு செய்ய வேண்டும். கோவில்கள் அருகில் உள்ள இறைச்சிக்கடைகளை எடுக்க வேண்டும். இல்லையென்றால் இந்து முன்னணி மக்களை திரட்டி போராட்டம் நடத்தும்.
அரசுக்கு வருமானம்
கோவில்கள் மூலம் 7 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருமானம் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. இதை முறையாக பயன்படுத்த வேண்டும். இந்த வருமானத்தை வழிபாடுகள் இல்லாத கோவில்களுக்கும் பயன்படுத்த வேண்டும். கோவில் வருமானத்தை கொண்டு தமிழகத்திற்கு துண்டுவிழாமல் பட்ஜெட் போடலாம் என்று நீதிமன்றமே சொல்லியிருக்கிறது. அந்த அளவிற்கு வருமானம் உள்ளது. அதில் பெரிய ஊழலும் நடக்கிறது.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். இதை நாங்கள் எதிர்க்கவில்லை. கிராமங்களில் சாதி பாகுபாடு இன்றியே பூஜைகள் நடந்து வருகிறது. இது ஒன்றும் புதியது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது, மாவட்ட தலைவர் கலைகோபி, நகர தலைவர் மணிகண்டன் ஆகியோர் உடன் இருந்தனர்.