கன்னியாகுமரியில் பரபரப்பு: ஜெபக்கூட்டம் நடக்கும் போது திடீரென உள்ளே நுழைந்த இந்து முன்னணியினர்
|புத்தளம் அருகே ஜெபக்கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்து முன்னணி நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் அருகே உள்ள உசரவிளையை சேர்ந்தவர் ஜெபசிங் (வயது 35). இவர் புத்தளம் அருகே உள்ள வீரபாகுபதியில் உள்ள கிறிஸ்தவ சபையில் பொருளாளராக உள்ளார். நேற்று முன்தினம் காலையில் அந்த சபையில் ஜெபக்கூட்டம் நடந்து கொண்டிருந்தது.
அப்போது இந்து முன்னணி ராஜாக்கமங்கலம் ஒன்றிய பொதுச்செயலாளரான அரியபெருமாள்விளையை சேர்ந்த சுரேஷ், ஒன்றிய தலைவரான ராஜாக்கமங்கலத்தை சேர்ந்த மார்த்தாண்டன், புத்தளம் பேரூராட்சி 15-வது வார்டு உறுப்பினர் வீரபாகுபதியை சேர்ந்த விஜயகல்யாணி, கண்ணன், ஜெகன், தெற்கு புத்தளத்தை சேர்ந்த மகாலிங்கம், உசரவிளையை சேர்ந்த சுடலைமணி என்ற மணி, ராமு ஆகிய 8 பேர் சேர்ந்து சபை வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து ஜெபக்கூட்டம் நடத்தக் கூடாது என்று தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஜெபசிங் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சுசீந்திரம் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் காந்திமதி, சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் செல்வசிங் ஆகியோர் 8 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சுரேஷை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 7 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.