'ஹிந்துத்துவ இந்தியா'வாகி வருவதை தடுத்து 'திராவிட இந்தியா'வாக மாற்ற வேண்டும் - கி.வீரமணி வலியுறுத்தல்
|மாநிலங்களின் அதிகாரங்களைப் பறிக்க மற்றொரு தந்திர முறை; நிதி தராமல் மாநில ஆட்சியின் குரல்வளையை நெரித்தல் என்று கீ.விரமணி தெரிவித்துள்ளார்.
சென்னை,
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
* இந்தியக் கூட்டமைப்புப் பற்றி கோல்வால்கர்
"இன்று நமக்குள்ள அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்கள் நமது ராஷ்டிரமானது உடலைப் போன்று பிரிக்கப்பட முடியாத ஓருறுப்பு தேசியம் வாய்ந்தது என்ற உறுதியான நம்பிக்கையில் ஆழ்ந்து ஊறியவர்கள் அல்ல. நமது அரசியல் சாசனத்தை சமஷ்டி அமைப்பாக நிறுவியதிலிருந்து இது புலனாகிறது. நமது நாடானது பல ராஷ்டிரங்களின் ஒன்றியம் (யூனியன்) என்று இன்று வர்ணிக்கப்படுகின்றது.
இதற்கு முந்தைய அமைப்பில் வெறும் மாகாணங்களாக இருந்தவையெல்லாம்; "மாநிலங்கள்" என்ற கவுரவ அந்தஸ்துடன் எத்தனையோ தனி அதிகாரங்களுடன் விளங்குகின்றன.
முற்காலத்தில் நமது ஒருமித்த ஒரே தேசிய வாழ்க்கையை தனி உரிமை பெற்ற பல அரசியல் அமைப்புகளாக துண்டாடியபோது தேசிய ஒருமைப்பாடு சிதைந்தழிந்ததற்கும், தோல்வியடைந்ததற்கும் விதைகள் விதைக்கப்பட்டன. இன்றுள்ள சமஷ்டி அமைப்பும் அதே பிரிவினை விதைகளை விதைத்துள்ளது." - எம்.எஸ்.கோல்வால்கர், 'ஞானகங்கை', பக்கம் 325-326
- இதனை செயல்படுத்தி, தாம் உறுதிமொழி எடுத்த அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டுமான நெறிகளுக்கு எதிராக நடைமுறையில், அன்றாட ஆட்சியில் - பிரதமர் மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. ஆட்சி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் கடந்த 10 ஆண்டுகளில் மாநில அதிகாரங்களை ஒவ்வொன்றாகப் பறித்து, ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தமான மாநிலங்களை அழித்து, வெறும் ஒற்றை ஆட்சியாக - கூட்டாட்சி என்ற சொல்லையே அறவே விரட்டிவிடும் வகையில்
- ஒவ்வொரு சட்டம், திட்டம், அன்றாட ஆணைகள், செயல்முறைகள்மூலம் செய்து, அதன் ஆர்.எஸ்.எஸ். கொள்கை லட்சியத்திற்கு செயல்வடிவம் கொடுத்து வருகிறது!
* ஆரிய மனுதர்மக் கோட்பாட்டுக்கு ஒத்திகை!
ஜனநாயகப் போர்வையில் நாளும் எதேச்சதிகாரம் - தாம் பெற்ற 'புல்டோசர் மெஜாரிட்டி'மூலம் என்பதற்கும்; இவர்கள் பக்தி வேஷம் போட்டோ, மற்ற பல மலிவான, வாக்காளர்களை ஏமாற்றக்கூடிய ''மாய வித்தைகள்'' செய்தோ, மீண்டும் ஆட்சிக்கு மூன்றாவது முறையாக வந்தால், ஜனநாயக மதச்சார்பற்ற குடியரசு இந்தியா காணாமற்போய், அந்த இடத்தில் ஆரிய மனுதர்மப் பண்பாடுதான் கோலோச்சும் என்பதை அவர்கள் இப்போதே தொடங்கி, முன்னோட்டம் காட்டி வருகிறார்கள்.
தமிழ்நாட்டின் தொலைக்காட்சியின் பெயர் 'பொதிகை' - தமிழ்ப் பண்பாடு, மலைகள், இயற்கையையொட்டிய பண்பாட்டை தகவமைத்தும், நினைவூட்டும் வகையிலும், ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தப் பகுதி பிரபல மலைகள் நினைவாக இருப்பதைப் போன்று, அதன்படி நினைவாக வைக்கப்பட்ட ''பொதிகை'' பெயர், 'DD தமிழ்' - 'தூர்தர்ஷன் தமிழ்' என்று அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டுவிட்டது. எவ்வளவு தந்திரம் பார்த்தீர்களா?
* ஹிந்தி, சமஸ்கிருதத் திணிப்பு என்பது எல்லாம் பண்பாட்டுத் திணிப்பே!
ஹிந்தி, சமஸ்கிருதத் திணிப்பு என்பது வெறும் மொழித் திணிப்பு அல்ல; பண்பாட்டு அழிப்பு - சமஸ்கிருத ஆரியப் பண்பாட்டின் திணிப்பு என்பதை எப்படியெல்லாம், தம்முடைய அதிகாரங்கள்மூலம், மாநில அரசின் முன்னாலேயே, 'நம் கையைக் கொண்டே நம் கண்ணைக் குத்தும்' வித்தையாகவே நடத்தியுள்ளது எவ்வளவு வேதனைக்கும், கண்டனத்திற்கும் உரியது!
அதுபோலவே மாநிலங்களின் அதிகாரங்களைப் பறிக்க மற்றொரு தந்திர முறை; நிதி தராமல் மாநில ஆட்சியின் குரல்வளையை நெரித்தல் என்று கீ.விரமணி தெரிவித்துள்ளார்.
அதுபற்றி காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் கூறிய ஒரு முக்கிய அதிர்ச்சியூட்டும் செய்தி.
"நிதி ஆயோக்கின் செயல் அதிகாரியான பி.வி.ஆர்.சுப்பிரமணியம் என்பவர் ஒரு பொருளாதார கருத்தரங்கில் 14 ஆவது நிதிக் கமிஷன் மாநிலங்களுக்கு ஒதுக்கும் நிதி 42%ஆக இருக்கவேண்டும் என்று தந்த பரிந்துரையை, மோடி அரசு 33%ஆகக் குறைக்கச் சொல்லி, அதன் தலைவர் வி.வி.ரெட்டியிடம் - அதிகாரப்பூர்வமற்ற முறையிலும்கூறிட, அவர் அதை ஏற்க மறுத்து, பழைய பரிந்துரையே அதில் இருக்கும்படிச் செய்தார் என்பது - எவ்வளவு முக்கியமானது!
* 'இந்தியா' கூட்டணியினரின் கவனத்திற்கு...
மாநிலங்களிலிருந்துதானே ஒன்றிய அரசுக்கு நிதி கிடைக்கிறது என்பதை வசதியாக மறந்துவிட்டு, இப்படி செய்வது, இன்றும் தேசியப் பேரிடர் நிதி தர மறுப்பதுடன், ஓரவஞ்சனையுடன் நடந்துகொள்வது இது ஏதோ தானே நடப்பது அல்ல - ஆர்.எஸ்.எஸ். கொள்கை அமலாக்கத்தின் அடிநீரோட்டத்தைப் பொருத்தது!
எனவே, 'இந்தியா' கூட்டணியில் உள்ள பல மாநில முதலமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் மேற்சொன்னவற்றை ஓரணியில் நின்று - தன்முனைப்பைத் தள்ளி வைத்து - செயல்பட இந்த வாய்ப்பை நழுவவிட்டால், வேறு வாய்ப்பை எளிதில் பெற முடியாது.
* இந்தியா வெறும் 'ஹிந்துத்துவ' ஆவதைத் தடுத்திடுவோம்!
இந்தியா, வெறும் 'ஹிந்துத்துவ இந்தியா'வாகி வருவதை ஜனநாயக மக்கள், சமூகநீதி (திராவிட) இந்தியாவாக மாற்றிட, இவற்றை மக்கள் மன்றத்தின்முன், புதிய தலைமுறை இளைஞர்கள், வாக்காளர்களிடம் போய்ச் சொல்லி, விழிப்புணர்வை ஏற்படுத்திட 'இந்தியா' கூட்டணியினர் முன்வரவேண்டியது அவசரம், அவசியம்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.